March 21 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருத்தணி

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுப்பிரமணியசுவாமி

உற்சவர்        :     சண்முகர்

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     மகுடமரம்

புராண பெயர்    :     சிறுதணி

ஊர்             :     திருத்தணி

மாவட்டம்       :     திருவள்ளூர்

 

ஸ்தல வரலாறு :

திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ண்ம். ‘உலகப்பற்று’ எனப்படும் ஆசையையும் குறிக்கும். ‘இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்’ என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண் கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத் தன்மையைக் குறிக்கும். இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இது போன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே இறைவன் விரும்புவான். அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப் பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவள் அவரைத் தழுவினாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள். மக்கள் அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத் தலம் இது. முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் ‘தணிகை மலை’ என்று பெயர் பெற்ற இத்தலம் ‘திருத்தணி’ என்று மாறியது.

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக ‘கஜவள்ளி’ என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

 

மூலஸ்தானத்திற்கு பின்புறபுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீது கொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டு கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

 

முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிக அளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.

 

கோயில் சிறப்புகள் :

  • திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்

 

  • ‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று ஸ்ரீமுருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார்.

 

  • திருத்தணி முருகப் பெருமானை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.

 

  • ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம்.

 

  • திருமாலிடம் இருந்து தான் கைப்பற்றிய சக்ராயுதத்தை முருகன் மீது ஏவினான் தாரகாசுரன். அதைத் தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் முருகன். பிறகு, அந்த சக்ராயுதத்தை திருமாலிடமே ஒப்படைத்தாராம். இன்றும் தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த தழும்பைக் காணலாம். இவரின் பாதத்தின் கீழே ஆறெழுத்து மந்திரம் பொறித்த யந்திரம் உள்ளது.

 

  • ஒரு முறை பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை விரும்பாத சிவனார், சிறையிலிருந்த பிரம்மனை மீட்டார். பிறகு, கர்வம் நீங்கிய பிரம்மன் சிவனாரது ஆலோசனைப்படி, இங்கு வந்து தவம் இயற்றி தணிகைவேலனை வழிபட்டு, அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய பிரம தீர்த்தம் மற்றும் பிரமேஸ்வரர் லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்.

 

  • பிரம்மனின் மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் ஸ்ரீசரஸ்வதீஸ்வரர் லிங்கமும் இதற்குச் சான்று

 

  • நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி- பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசம் பெற்றார். இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, சிவதத்துவ அமிர்தம் எனும் நதி ‘நந்தி ஆறு’ என்றும் நந்திதேவர் தவம் செய்த குகை ‘நந்தி குகை’ என்றும் வழங்கப்படுகின்றன.

 

  • இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து சுனை ஒன்று (இந்திர நீலச்சுனை) ஏற்படுத்தி, அதன் கரையில் நீலோற்பலக் கொடியை வளர்த்தான். அதன் மலர்களால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் தணிகை வேலனை பூஜித்து சங்க- பதும நிதிகள், கற்பகத்தரு, சிந்தாமணி மற்றும் காமதேனு ஆகியவற்றைப் பெற்றான். இதனால் தணிகை முருகன், ‘இந்திர நீலச் சிலம்பினன்’ என்று பெயர் பெற்றார். இன்றும் இவரது அபிஷேகத்துக்கு இந்திர நீலச்சுனையின் தீர்த்தமே பயன்படுகிறது. இதில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி இல்லை.

 

  • திருத்தணியில் முருகப் பெருமானை தியானித்து தவம் இயற்றினால் முத்தமிழறிவும், ஞானமும் கிட்டும்! என்று சிவபெருமான் அருளியபடி அகத்தியர் இங்கு வந்து, தவம் இயற்றி முருகப் பெருமானின் அருள் பெற்றார்.

 

  • பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ் கூறுகிறது. மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, தணிகை வேலனை வழி பட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

 

  • தணிகை மலையின் தென்கிழக்குத் திசையில் சப்த ரிஷிகள், தணிகை முருகனை பூஜித்த இடம் உள்ளது. இங்கு அவர்கள் அமைத்த ஏழு சுனைகள் மற்றும் கன்னியர் கோயில் ஆகியன உள்ளன.

 

  • அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார்.

 

  • கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில், மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில்கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம், சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே எனவும், உலகில் மலைகள் பல இருப்பினும், சிவபெருமான் கயிலாய மலையினை காதலித்தது போல, முருகன் திருத்தணிகை மலையினை பெரிதும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான் எனவும் இதனைச் சிறப்பித்து பாடியுள்ளார்.

 

  • திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.

 

  • சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் முத்துஸ்வாமி தீட்சிதரும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்றவர். ஒரு முறை தன் குருநாதரது ஆணைப்படி திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் முத்துஸ்வாமி தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம். அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்சிதர். மறு கணமே ‘ஸ்ரீநாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்சிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள் ஆகும்.

 

  • திருவருட்பிரகாச வள்ளலார் தன் இளமை பருவத்தில் தியானத்தில் இருந்தபோது அவருக்கு திருத்தணி முருகன் கண்ணாடியில் காட்சி தந்தருளினார். இதை, திருவருட்பா- ஐந்தாம் திருமுறை- பிரார்த்தனை மாலை (சிர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்… தணிகாசலம் என் கண்ணுற்றதே…) பாடல் மூலம் அறியலாம்.

 

  • ‘மருதமலை மாமணியே’ எனும் திரைப்படப் பாடலைப் பாடிய மதுரை சோமு, வருடம்தோறும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு துவங்கி மறு நாள் காலை 4.30 மணி வரை இடை விடாது பக்திப் பாடல்கள் பாடி பக்தர்களை மகிழ்விப்பாராம். இந்த வழக்கத்தை தனது ஆயுள் வரை கடைப்பிடித்தார் பாடகர் சோமு.

 

 

  • வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகளுக்கு 1917ல், புத்தாண்டு தினத்தின்போது துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வழிபடலாம்’ என்ற எண்ணம் தோன்றியது. எனவே, புத்தாண்டின்போது திருத்தணிக்குச் சென்று முருகப்பெருமானை புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டில் 1008 குட பால் அபிஷேகம் நடக்கும்.

 

  • ஆங்கில புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானை வேண்டி, கோயிலில் அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழைப் பாராயணம் செய்து வழிபடுவார்கள். இந்தத் திருவிழாவால்தான் முருகப்பெருமானுக்கு ‘தணிகை துரை’ என்ற பெயரும் உருவானது.

 

  • யானை வாகனத்துடன் முருகன் காட்சி தருகிறார். இந்த யானை வெளியே பார்த்த படி இருப்பது மாறுபட்டது. முருகன் தெய்வானையை மணந்த போது, ஐராவதம் என்னும் தேவலோக யானையை இந்திரன் பரிசாகக் கொடுத்தார். இதனால், தேவலோகத்தில் வளம் குறைந்தது. இதனால் முருகன், யானையின் பார்வையை தேவ லோகம் நோக்கி திருப்பும் படி கூற, யானையும் தேவலோகம் இருக்கும் கிழக்கு நோக்கி உள்ளது.

 

  • முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

 

  • முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர்.

 

  • கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவரைத் தரிசிக்கலாம். ஒரு நாய் வழக்கம்போல, பைரவருக்கு பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

 

  • மூலஸ்தானத்திற்கு பின்புறபுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீது கொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.

 

திருவிழா: 

  • மாசிப் பெருந்திருவிழா – வள்ளி கல்யாணம் – 10 நாட்கள் திருவிழா – இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது.

 

  • சித்திரைப் பெருந்திருவிழா – தெய்வானை உற்சவம் -10 நாட்கள் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

 

  • ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,

திருத்தணிகை- 631209

திருவள்ளூர் மாவட்டம்.

 

போன்:    

+91-44 2788 5303

 

அமைவிடம் :

அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

seventeen − 8 =