March 18 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஓதிமலை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     ஓதிமலையாண்டவர்

உற்சவர்         :     கல்யாண சுப்பிரமணியர்

தல விருட்சம்   :     ஒதிமரம்

தீர்த்தம்         :     சுனை தீர்த்தம்

புராண பெயர்    :     ஞானமலை

ஊர்             :     இரும்பறை

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டார். அப்படி அவர் தனது படைப்புத் தொழிலை செய்வதற்காக தேர்வு செய்த இடம், இந்த ஓதிமலை

 

ஸ்தல வரலாறு :

கயிலாய மலை அன்று கோலாகலமாக இருந்தது. தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் அம்மையையும் அப்பனையும் தரிசித்தபடி இருந்தனர். அப்போது, விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் அங்கே இருந்தனர். பிரம்மதேவன், இறைவனை தரிசிக்க அங்கு வந்தான். நந்திதேவர், விநாயகர் என்று துவங்கி அவையில் வணங்கத்தக்க அனைவரையும் வணங்கி, இருக்கையில் அமர்ந்தான். முருகப் பெருமானை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

ஈசனின் புதல்வனான என்னைக் கண்டு காணாமல் கர்வத்துடன் இருக்கிறாரே… கயிலையில் கால்பதிப்பவருக்கு இந்த கர்வம் இருக்கக் கூடாது’ என்று தீர்மானித்தான் முருகப் பெருமான். பிரம்மனின் ஆணவத்தை தகர்த்தெறியவும் முடிவு செய்தான். உடனே, பிரம்மனை அருகே அழைத்து, அவரிடம் ”தாங்கள் யார்?” என்றான் முருகன்!

”என்னைத் தெரியாதா? நீ பாலகன் ஆயிற்றே! உனக்குத் தெரியாதுதான்! நான்தான் பிரம்மதேவன். படைக்கும் கடவுள். சர்வ லோகங்களிலும் உள்ள ஜீவன்களை படைத்து வருபவன் நானே!” என்று செருக்குடன் தெரிவித்தான்.

”அப்படியா? சரி… இந்த உலக ஜீவன்களின் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது எது? சொல்லுங்கள்” என்று பிரம்மனிடம் வினவினான் முருகன்.

”இதென்ன கேள்வி… படைப்புத் தொழிலின் ஆதாரம் ப்ரணவம்தான்” என்றான் கம்பீரமாக!

முருகன் விடவில்லை. ”ப்ரணவம் என்பதன் பொருள் என்ன?”

”ஓம் எனும் அட்சரம்தான் ப்ரணவம் விளக்கும் பொருள்.”

”தாங்கள் சொல்வது சரிதான்… ஆனால், ஓம் எனும் அட்சரத்தின் பொருளைப் புரியும்படியாக விளக்குங்களேன்” என்றான். பிரம்மன் தடுமாறினான்; பதில் தெரியாமல் தலை குனிந்தான்.

தந்தைக்கே வேதத்தின் பொருளை உரைத்த அந்த ஸ்வாமிநாதக் கடவுள் வெகுண்டான். பிரம்மனைத் தண்டிக்கவும் தீர்மானித்தான். ”படைப்பின் மூலமான ஓம் எனும் அட்சரத்தின் பொருளை விளக்க முடியாதவர், படைப்புக் கடவுளாக இருப்பதா? அதற்கு உமக்குத் தகுதி இல்லை” என்று சொல்லி, அவரது தலையில் குட்டி, பூலோகத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன சிறையில் (இன்றும் அந்த ஊரின் பெயர் இரும்பறை. இரும்பால் ஆன அறை எனும் பொருள் கொண்டது. ஓதிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது) அடைத்தான்.

அது மட்டுமா? அடுத்து படைப்புத் தொழிலையும் தானே ஏற்றான் முருகப் பெருமான். அப்போது அவர் தங்கி இருந்த இடமே ஓதிமலை. பிரம்மதேவன் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த சிவனார் அங்கே தோன்றி, முருகப் பெருமானிடம் பேசி, பிரம்மனை விடுவித்தார். பின்னர் இரும்பறையிலேயே எழுந்தருளினார். இங்கு உள்ள இறைவனின் திருநாமம்- கயிலாசநாதர்; சுயம்பு லிங்கம். பிரம்மதேவன் சிறைப்பட்ட அதே இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓதிமலையில் இருந்தபடியே ஓம்காரத்தின் பொருள், வேதத்தின் விளக்கங்கள் ஆகியவற்றைத் தந்தைக்கு எடுத்துரைத்தானாம் முருகப் பெருமான். இதனால்தான், ‘ஓதியமலை’ எனும் பொருளில் ஓதிமலை ஆனதாகச் சொல்வர்.

 

பதினெட்டுச் சித்தர்களில் பிரதானமானவரான போகர், இந்த ஓதிமலை குமார சுப்ரமண்யரைத் தரிசித்துள்ளார். அப்போது, முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகமும், 12 திருக்கரங்களும் இருந்ததாம். ஓதிமலையின் வடகிழக்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியில் அக்னி வளர்த்து, மூன்று யாகங்கள் செய்து முருகப் பெருமானை வழிபட்டாராம் போகர். யாகத்தால் உண்டான சாம்பல் இன்றும் அந்தப் பகுதியில், வெண்ணிற மணல் போல் – விபூதியாய் காட்சி தருகிறது. எனவே, இந்த இடத்தை ‘விபூதிக் காடு’ என்று வழங்கி வந்தனர். இப்போது ‘பூதிக் காடு’ என அழைக்கப்படுகிறது.

யாகம் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தில் இருந்து, தோண்டத் தோண்ட விபூதி நிறத்திலான மணல்தான் கிடைக்கிறது. அதனால், இந்தப் பகுதி முழுதும் உள்ள மணல், போகர் செய்த யாகத்தின் மிச்சமாகக் காட்சி தருவதாகச் சொல்வர். சில காலத்துக்கு முன் வரை, ஓதிமலை ஆலயத்தின் பக்தர்களுக்கு, இந்த வெண் மணலை விபூதிப் பிரசாதமாக வழங்கி வந்தனர்.

ஆறு தலையும், 12 திருக்கரமும் கொண்டு ஆதியில் விளங்கிய ஓதிமலை முருகப் பெருமான், இன்று ஐந்து திருமுகத்துடன் எட்டுத் திருக்கரங்கள் கொண்டு காட்சி தருவதற்கு போகரே காரணம்! எப்படி என்கிறீர்களா?

இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.

ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர்.

ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் – அதே கோலத்தில்… கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்… குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிறிய கோயில். ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், நாகர், இடும்பன், விஸ்வநாதர், விசாலாட்சி, ராஜராஜேஸ்வரி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு.

 

  • 28 சிவாகமங்கள் மற்றும் குமார தந்திரம் ஆகியவற்றில் விளக்கப்படாத திருமேனி இது. ஐந்து திருமுகங்கள் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமானின் பின்புறம் மயில் வாகனம். சூர சம்ஹாரத்துக்கு முன்பு அமைந்த தலம் என்பதால், இந்திரனே இங்கு மயிலாக அமர்ந்துள்ளானாம்.

 

  • குழந்தை முகம்… அலட்சியம் செய்த பிரம்மனை மிரட்டியதால் முகத்தில் அதிகார தோரணை தென்படுகிறது. ஒரு காலைச் சற்று முன்னே எடுத்து வைத்துக் காணப்படுகின்ற தோற்றம் (இதைச் சற்று கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்)… அதாவது, ‘எதையும் நான் சாதிப்பேன்… உங்களுக்கு உதவுவதற்காக புறப்பட்டு வருகிறேன்’ என்பது போல் பக்தர்களுக்கு உதவ முன் வரும் வடிவம்!

 

  • வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க… மற்ற மூன்று கரங்களில் கத்தி, அம்பு, வஜ்ஜிரம் ஆகியவையும், இடக் கைகளில் ஒன்று வரத முத்திரையில் இருக்க… மற்ற மூன்று கரங்களில் கேடயம், வில், பாசம் ஆகியவையும் காணப்படுகின்றன. அலங்கார சொரூபனை உளமார தரிசிக்கிறோம்.

 

  • பிற ஆலயங்களில் இருப்பது போல், பெரிய பீடம் இல்லை. இங்கு திருகு பீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகுமார சுப்ரமண்யர். தரையோடு தரையாக இருக்கும் பீடம் இது!

 

  • வேறெங்கும் காண்பதற்கு அரிதான நிலையில், ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு முருகப் பெருமான் இங்கு தரிசனம் தருவது விசேஷம். ஐந்து முக வடிவம் என்பது ‘ஐம்முகச் சிவன்’ என்பர். அதாவது, சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு வடிவங்கள் அல்ல என்பதை உணர்த்தும் திருவடிவம்தான் ஐந்து திருமுகம் கொண்ட ‘ஸ்ரீகுமார சுப்ரமண்யர்’. அதனால், இந்தப் பெருமானை சிவகுமாரன் என்றும், குமாரசிவம் என்று சொல்கின்றனர்.

 

  • ‘ஓம்காரத்தின் பொருளை, இங்குதான் தந்தைக்கு ஓதினார் முருகப் பெருமான். இதனால்தான் இந்த மலை ஓதிமலை ஆயிற்று’ என்கிறது ஓதிமலை தல புராணம்.

 

  • சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை என்றும், சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்ற பெயரும் ஏற்பட்டதாக வரறாற்றுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் ஸ்தலமாகும்.

 

  • ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

 

  • மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

 

  • இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

 

  • ஓதிமலை, தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள குன்றுகளில் மிகவும் உயரமானது. 70 டிகிரி கோணத்தில் செங்குத்தானது. இம்மலை தனி மலையாக உள்ளது. அடிவாரத்தில் இருந்து 1800 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் ஆலயம் கற்றளியாக உள்ளது. முற்காலத்தில் செங்கற்களால் கட்டப் பெற்றிருந்த இவ்வாலயம் 1932ல் செங்கற் கலவை நீக்கி கருங்கல்லினால் அமைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் இடும்பன் சந்நதி, பிறகு சுவாமி சந்நதி. மிகச் சிறிய அர்த்த மண்டபம்.

 

  • சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ரங்கபாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் காலத்தில் ஆலயத்தின் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றதாம்! அப்போது புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து கலசத்தில் நீர் சேகரித்து வந்து, குடமுழுக்கு வைபவம் நடந்ததாம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஓலைச் சுவடிகளில் இருக்கின்றவாம்.

 

  • முருகன் தரும் உத்தரவு ஸ்ரீகுமார சுப்ரமண்யரிடம் பூ வைத்து வரம் கேட்டல் எனும் பிரார்த்தனை இங்கு விசேஷம். இல்லறம், திருமணம், தொழில், விவசாயம், வெளிநாட்டு உத்தியோகம் ஆகியவை குறித்து முருகப் பெருமானிடம் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துகின்றனர், இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள். வெள்ளை மற்றும் செவ்வரளிப் பூவை, முருகப் பெருமானின் சிரசின் மேல் மேல் ஆலய அர்ச்சகர் வைப்பார். அப்போது அந்தப் பூ, முருகப் பெருமானின் வலது பக்கத்தில் விழுந்தால், அவர் உத்தரவு கொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்கின்றனர். இடப் பக்கத்தில் விழுந்தால், சிறிது காலம் காத்திருக்க வேண்டுமாம். பூ வைத்து உத்தரவு கேட்பதற்காகவே விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

 

திருவிழா: 

தைப்பூசத்தில் 9 நாள் பிரம்மோற்ஸவம், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

 

முகவரி:

அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில்,

புஞ்சைபுளியம்பட்டி வழி,

இரும்பரை-638 459,

மேட்டுப்பாளையம் தாலுகா,

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

தொலைபேசி:

+91-4254-287 428, 98659 70586.

 

அமைவிடம் :

கோவை மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பொறை. இங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் ஓதிமலையை அடையலாம். புளியம்பட்டி சென்று, அங்கிருந்தும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்குச் செல்லலாம்.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

4 × 5 =