March 01 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு

 

மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார்

தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி )

தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்

புராண பெயர்    :     வில்லிபுத்தூர்

ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர்

மாவட்டம்       :     விருதுநகர்

 

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும்.

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.  திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

ஸ்தல வரலாறு :

தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர்  ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ்க் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.  கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும். கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல புலமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து “கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா” என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலைகளே தனக்கு விருப்பமானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும், “இறைவனையே ஆண்டவள்” என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக     காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இந் நூலில் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்கள் அமைந்துள்ளன.

 

கோயில் சிறப்புகள் :

  • ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் “புத்தூர்’ என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து “ஸ்ரீவில்லிபுத்தூர்’ என பெயர் பெற்றது.

 

  • தமிழகத்திலேயே பெரியாழ்வார், பெரிய கோயில், பெரிய குளம், பெரிய பெருமாள், பெரிய கோபுரம், பெரிய விமானம், ஆகியவற்றைக்கொண்ட ஸ்தலம். இங்குள்ள மாரியம்மன் கோயில்கூடப் பெரிய மாரியம்மன் கோயில் என்றுதான் அழைக்கப்படுகிறது. பெரிய கூரை வேயப்பட்ட கோயில் இது.

 

  • தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.

 

  • இந்தக் கோயில் கோபுரம் 196 அடி உயரமும் 11 நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டது. இந்தக் கோபுரத்தில் சிலைகள் எதுவும் கிடையாது. தமிழக அரசின் சின்னமாக இந்தக் கோயிலின் கோபுரம் விளங்குகிறது.

 

  • பெருமாள் கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத ஓர் அதிசயத்தை இங்கு காணலாம். பொதுவாக, தாயார் சந்நிதி தனியாகத்தான் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான் பெருமாளுடன் தாயாரும் ஒரே சந்நிதியில் இருப்பார்கள்.

 

  • எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவருமாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது.

 

  • எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கும்.

 

  • கள்ளழகரிடம் ஆண்டாள், திருவரங்கம் ரங்கநாதனை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் நூறு தடா வெண்ணெய்யும் நூறு தடா அக்கார அடிசிலும் உனக்குப் படையலிடுகிறேன் என்று சொல்லி வேண்டிக்கொள்வார்

 

  • ஆண்டாள் அவதரித்து சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய ராமாநுஜர் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் ராமாநுஜரை ‘வாங்கண்ணா கோயில் அண்ணா’ எனச்சொல்லி ஆண்டாளே எழுந்து வந்து வரவேற்றதாக ஐதிகம். அதனால்தான் மூலவரிடமிருந்து ஏழாவது அடியில் ராமாநுஜருக்கு தங்கச்சிலை வைத்திருப்பார்கள்.

 

  • 108 திவ்யதேசங்களில் 56 வது திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் தெய்வம் வடபத்ரசாயி ஆலமரத்தில் சாய்ந்து இருப்பார்.

 

  • ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் இவர்கள் மூவருடனும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தொடர்பு உண்டு. வேதாந்த தேசிகர், ஶ்ரீவில்லிபுத்தூர் குறித்து 29 பாசுரங்கள் பாடியுள்ளார். மணவாளமாமுனிகளுக்காக மார்கழி மாதம் முடிந்ததும் ‘எண்ணெய்க்காப்பு உற்சவம்’ என்று ஒரு உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.

 

  • இங்குள்ள ஆண்டாள் கிளி மிகவும் விசேஷமானது. ஆண்டாள் ரங்கனை மணப்பதற்காக மூன்று பேரைத் தனித்தனியாக தூது அனுப்புகிறார். முதலில் மழையைத் தூதாக அனுப்புகிறார். மழை பெருமாளின் பேரழகைப் பார்த்ததும் பொழிந்து சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுகிறது. அடுத்ததாக வண்டைத் தூது அனுப்புகிறார். வண்டு, பெருமாளின் மாலையில் இருக்கும் தேனை அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிக் கிடந்து விடுகிறது. அடுத்ததாகத்தான் கிளியைத் தூது அனுப்புகிறார். ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளி.’ கிளி தவறாமல் ஆண்டாள் சொன்னதைச் சொல்ல ரங்கமன்னர் ஆண்டாளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் இங்குள்ள ‘ஆண்டாள் கிளி’ மிகவும் விசேஷம்.

 

  • ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். திருவரங்கம் பெருமாள் ரேவதி நட்சத்திரம். கருடாழ்வார், சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். பூரம், ரேவதி, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மிகவும் விசேஷமான க்ஷேத்திரம்.

 

  • 33 அடி உயரமுள்ள தங்க விமானம் ஏறக்குறைய 100 கிலோ அளவில் தங்கத்தால் வேயப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய கோபுரம், பெரிய விமானம் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலைத்தான் ஆண்டாள் திருக்கோயிலைத்தான் சொல்ல முடியும். 2016 -ம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

  • எப்போதும் வைர வைடூரிய நகைகளுடன் இருக்கும் பெருமாள் ஆண்டாள் மாலையை அணிந்துகொள்ளும்போது எந்தவித ஆபரணங்களும் இல்லாமல் சாதாரண வேஷ்டியுடன்தான் ஆண்டாளின் மாலையைப் பெற்றுக்கொள்கிறார். திருமலையில் இது மிகப்பெரிய வைபவமாகவே நடைபெறுகிறது. இதற்காகத் திருப்பதி பிரமோற்சவத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மாலை திருமலைக்குச் செல்வது பெரிய விழாவாகவே இங்கு நடைபெறும்.

 

  • பாண்டிய மன்னன் வல்லபதேவனின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு கோயில் கோபுரத்தைப் பெரியாழ்வார் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.

 

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனம் அமைத்து, பராமரித்து வந்தார். அதிலிருந்து பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து வந்தார். நந்தவனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பூமாதேவியின் அம்சமாக ஆண்டாள் அவதரித்தார்.

 

  • ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரத்தின்போது இழுக்கப்படும் அழகியதோர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ம் நாள், தேரோட்டம் நடைபெறும். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப் பெரிய விழா.

 

  • அரங்கனை மணந்த ஆண்டாள் பாடிய பிரபந்தங்கள் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வேதத்தின் சாரம் எனவும் ‘சங்கத் தமிழ் மாலை’ என்றும் போற்றப்படுகிறது.

 

  • தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும் பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்விக்க அடிமை கொள்வதால் ‘ஆண்டாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • ஆண்டாள் தான் பிறந்த ஊரை ஆயர்பாடியாகவும் தன்னை கோபிகையாகவும் எண்ணி பாடியதால் இங்கு பால் வளம் பெருகியது. இன்றளவும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது.

 

  • ஜீவாத்மாவாக பூமியில் பிறப்பெடுத்து, பரமாத்வாவை அடைய முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த முன்னுதாரணம் ஆண்டாள்தான்.

 

  • கருடாழ்வாரின் மூன்று பதவி:கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

 

  • ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

 

  • ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் சன்னதிகள் ஓம் எனும் பிரணவ மந்திர அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் ரெங்கமன்னார் “அ’காரமாகவும், ஆண்டாள் “ம’காரமாகவும், கருடாழ்வார் “உ’காரமாகவும்  அமைந்து  “ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர்.

 

  • திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை “ஏலே’. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக “ஏலே’ என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை “எல்லே’ என்று இருந்ததாம். திருப்பாவையில் “எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?’ என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். “எல்லே’ என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து “ஏலே’ என்று ஆனதாகச் சொல்வர். குழந்தைகள் ஆணாயினும், பெண்ணாயினும் “ஏலே’ என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்து விட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், “ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே’ என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.

 

  • ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை ‘வராக க்ஷேத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.

 

  • வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

 

  • பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், குரோதன ஆண்டு, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியில், சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர, வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்தூரார், தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த புண்ணியத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.

 

  • நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள். அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

 

  • கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர். உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

திருவிழா: 

ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்

புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம் 10 நாள்

பங்குனி திருக்கல்யாண உற்சவம் 10 நாள்

மார்கழி எண்ணெய் காப்பு திருநாள்

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில்,

ஸ்ரீவில்லிபுத்தூர் – 626 125

விருதுநகர் மாவட்டம்.

 

போன்:    

+91-4563 – 260 254

அமைவிடம் :

மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருதுநகரிலிருந்து – 50 கி.மீ., சாத்தூரிலிருந்து – 8 கி.மீ., அருப்புக்கோட்டையிலிருந்து – 32 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து – 82 கி.மீ., மதுரையிலிருந்து – 90 கி.மீ.,

 

Share this:

Write a Reply or Comment

14 + five =