March 12 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… | கழுகு மலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     கழுகாசல மூர்த்தி (முருகன்)

அம்மன்    :     வள்ளி, தெய்வானை

ஊர்       :     கழுகு மலை

மாவட்டம்  :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு :

முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு வந்தான். அப்போது ஓய்வெடுக்க விரும்பி வனத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் அமர்ந்தான். மிகுந்த களைப்பின் காரணமாக தூங்கிப் போனான்.

நண்பகலில் பூஜை செய்வது போன்றும், மணி ஒலிக்கும் சத்தம் கேட்டும் கண் விழித்துப் பார்த்தான். அப்போது அங்கு பசு ஒன்று பாறையில் தானாக பாலை சுரந்து கொண்டு இருந்ததைக் கண்டான். சிறிது நேரம் கழித்து அந்த பாறையை அகற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையும், அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானும் காட்சியளித்தனர். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த மன்னன், இறைக் காட்சியால் உள்ளம் நெகிழ்ந்து வழிபட்டான். மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படாமல், தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும், தேவர்கள் வந்து பூஜிக்கின்ற மூர்த்தி என்றும் உணர்ந்து மக்கள் வழிபட வசதிகள் செய்து வைத்தான் என்கிறது தல வரலாறு.

புராணச் சிறப்பு :

ராமபிரானும், சீதாப்பிராட்டியாரும் வனத்தில் இருந்தபோது, ராவணன், சீதையை கவர்ந்து சென்றான். அதனை தடுத்த சடாயுவின் இறக்கையை வெட்டினான் ராவணன். பின்னர் அங்கிருந்து சீதையோடு தப்பித்துச் சென்றான். சீதையின் குரல் கேட்டு ஓடி வந்த ராமனும், லட்சுமணனும் ரத்தக் காயத்துடன் விழுந்து கிடந்த சடாயுவை கண்டனர். அவர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு தன் உயிரை விட்டது சடாயு பறவை. இதனால் ராமபிரான் மிகவும் மனம் வருந்தி, சடாயுவிற்கு செய்ய வேண்டிய சடங்குகளை தானே செய்தார்.

சடாயு இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது உடன்பிறப்பான சம்பாதி முனிவர், ராமபிரானை அடைந்து சடாயுவின் இறப்பிற்கு மிகவும் வருந்தியதோடு, தமது உடன்பிறந்தவனுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைக்கூட செய்ய இயலாத பாவியாகி விட்டேனே என்று புலம்பினார். அதைக்கேட்ட ராமபிரான், சம்பாதி முனிவரை தேற்றி, ‘தென்னாட்டில் 300 அடி உயரம் உள்ள மலையடிவாரத்தில், ஒரு குகையில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கி உன் பாவத்தைப் போக்கிக்கொள்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். கழுகு முனிவராகிய சம்பாதி, இத்தலத்திற்கு வந்து இந்த மலையிலேயே தங்கியிருந்து, ஒரு முகமும், ஆறு கைகளும் கொண்டு விளங்கும் முருகப்பெருமானாகிய சுப்பிரமணியரை வணங்கி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை கொண்ட முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இத்தலத்தில், கழுகு முனிவர் வசித்து வந்ததால் இம்மலை ‘கழுகுமலை’ என்ற பெயரைப் பெற்றது. கழுகுமலையில் அருள்பாலிக்கும் மூர்த்தி என்பதால், இத்தல இறைவனும் ‘கழுகாசலமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள் :

  • கழுகுமலையில்அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

 

  • இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம்

 

  • இந்தக் கோவிலில் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மயிலின் தலைப்பகுதி இறைவனின் இடப்பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

 

  • இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.அமர்ந்த நிலையில் 4 அடி உயரத்தில் பெரிய திருமேனி.

 

  • பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், மக்களுக்கு மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் இத்தல சுப்பிரமணியர் திகழ்கிறார். எனவே இத்தலம் ‘குரு-மங்கள ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

 

  • இறைவனின் கருவறை மலையின் குகையில் அமைந்து இருப்பதால், இக்கோவிலின் மலையே ஆலயத்தின் கோபுரமாக விளங்குகிறது.

 

  • தேவார காலத்திற்கு பிறகு பாடப்பட்ட பக்தி பாடல்களுள், மிகவும் புகழ் பெற்று விளங்கி வருபவை திருப்புகழ் பாடல் களாகும். இது 13-ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதரால் இயற்றப்பட்டதாகும். இந்த பாடல்கள் அனைத்தும் முருகப்பெருமானை போற்றுவதாக அமைந்தவை. கழுகுமலை முருகப்பெருமானை குறித்து தனது திருப்புகழில் மூன்று பாடல்களை அருணகிரி நாதர் இயற்றியுள்ளார்.

 

  • 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட கந்தபுராணத்தை இயற்றியுள்ளார். அதில் குன்றுதோராடிய குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும், அவற்றில் ராஜயோகமாக முருகன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த எட்டயபுரம் காளிப்புலவரும், சிதம்பர கவிராயர் எனும் புலவரும், ‘கழுகுமலை பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் இரண்டு நூல்களைப் படைத்துள்ளார்கள்.

 

  • இசைவாணர்களில் சிறப்பு பெற்ற முத்துசாமி தீட்சிதரால் கீர்த்தனைகளும், பாம்பன் சுவாமிகளால் திருப்பாக்களும் இந்த ஆலயத்தின் மேல் பாடப்பட்டுள்ளன.

 

  • மதுரையை தலைமையாக கொண்ட பாண்டிய நாட்டின் தென்பகுதியில் அமைந்திருந்தது கழுகு மலை. இத்தலத்திற்கு தெற்கேயுள்ள திருநெல்வேலியும், அதனைச் சார்ந்த பகுதியும் தென்பாண்டி நாடு என்று அழைக்கப்பட்டது. பாண்டியர்களை வென்ற சோழ மன்னர்கள், தங்களை சோழ பாண்டியர்கள் என்று குறிப்பிட்டு 11-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தனர். அந்த நூற்றாண்டில் சோழ நாட்டு தலைநகரமாகிய திருவானைக்காவலில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் போன்று கழுகுமலையில் ஜம்புலிங்கேசுவரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு கோயில் எழுப்பியுள்ளது வரலாற்று செய்தியாகும்.

 

  • முருகப்பெருமான் கோயில்களில் அசுரன் மயிலாக மாறியிருப்பதைக் காணலாம். அதன்படி மயிலின் முகம் முருகப் பெருமானுக்கு வலது புறத்தில் இருக்கும். ஆனால் இத்தலத்தில், இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகப் பெருமானுக்கு இடது புறத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும்.

 

  • இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும் , சிவ பெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும்..

 

  • அஜந்தா எல்லோரா குகை ஓவியங்கள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் பண்டையை தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் கட்டடக்கலை நுட்பத்தை பறைசாற்றி நிற்கிறது கழுகுமலை. தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை முன்பு அரைமலை என அழைக்கப்பட்டது. புராதான சின்னங்கள் நிறைந்த இம்மலையில் பல அற்புதங்கள் பொதிந்து காணப்படுகின்றன.

 

  • இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் ஆறு கரங்களும் உள்ளன. தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோயில் இது மட்டுமே.

 

  • தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனே இக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

  • முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதானத்தையுடைய மலை “சிவன் ரூபம்’ என்றும்; கிழக்கு முகமாக இருக்கும் மலை “சக்தி ரூபம்’ என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 

  • சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும்.

 

  • பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலையாகும்.

 

  • கழுகுமலை வெட்டுவான் கோயிலில், மிருதங்கம் வாசிப்பது போன்று அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது.

 

திருவிழா: 

வைகாசி விசாகத்தன்று வசந்தமண்டபம் 10 நாள் திருவிழாவாக ‌‌‌கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டியில் 13 நாளும், தைப்பூசத்தில் 10 நாளும்,

பங்குனி உத்திரம் 13 நாளும் திருவிழா ‌கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள் மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில்,

கழுகுமலை-628552.

தூத்துக்குடி மாவட்டம்.

 

அமைவிடம் :

கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 21 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. நெல்லை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து இக்கோயிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி உள்ளது.

 

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

nineteen − one =