June 28 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குருகாவூர்

  1. அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     காவியங்கண்ணி, நீலோத்பல விசாலாட்சி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     பால்கிணறு

புராண பெயர்    :     திருக்குருகாவூர், வெள்ளடை

ஊர்             :     திருக்குருகாவூர்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. அவரால் இக்கோவிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கும் அவர் தொண்டர் கூட்டத்தினருக்கும் பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும் அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன் பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது அங்கு அன்னதான பந்தலோ சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை. வியந்த சுந்தரர் தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன் தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார்

 

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க திருஞானசம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். திருஞானசம்பந்தருக்கு காட்சி தந்த சிவன் அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 13 வது தேவாரத்தலம்

 

  • தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம் இப்போது திருக்கடாவூர் என்று அழைக்கப்படுகிறது.

 

  • மூலவர் சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர். மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில் சிறிய பாணலிங்கமாக சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார்.

 

  • இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும் இரண்டு சாமரங்களும் இருக்கிறது.

 

  • முருகன் தெற்கு திசை நோக்கி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவர் இங்கு குரு அம்சமாக வீற்றிருக்கின்றார்.

 

  • கோஷ்டத்தில் சட்டைநாதர் துர்க்கையம்மன் உள்ளனர். துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள் .

 

  • விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

 

  • ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது.

 

  • நவக்கிரக சன்னதி கிடையாது.

 

  • பிரகாரத்தில் துர்வாசர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருகிறார்.

 

  • பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கியருளிய தலம். சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

 

  • இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு சுகப்பிரசவ நாயகி என்ற பெயர் உண்டு. அம்பிகைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால் சுகப்பிரசவம் ஆகும் என்பது மக்கள் நம்பிக்கை.

 

  • சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் வரிசைப்பற்று என்றும், இடமணல் என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறுகிறது. திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.

 

  • திருஞானசம்பந்தர். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பார் காட்டு உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் குருகாவூர் வெள்ளடை எம் கோவே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா:

சித்ராபவுர்ணமியில் கட்டமுது படைப்பு விழா,

தை அமாவாசை ஆண்டுதோறும், பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும், தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில்,

திருக்குருகாவூர்-609115,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:

+91- 9245 612 705.

 

அமைவிடம்:

சீர்காழி – தென் திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் குருகாவூரை அடையலாம். தற்போது மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது.

Share this:

Write a Reply or Comment

5 + 9 =