June 27 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் வரகுணமங்கை

  1. அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     விஜயாஸனர் ( பரமபத நாதன்)

உற்சவர்        :     எம்மடர் கடிவான்

தாயார்          :     வரகுண வல்லி, வரகுணமங்க‌ை

தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி

புராண பெயர்    :     வரகுணமங்கை

ஊர்             :     நத்தம்

மாவட்டம்       :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். “சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்” என்று கூறினார்.

வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.

ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன. இத்தல பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் (வரகுணமங்கை) விஜயாஸனர் கோயில், 92-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • விஜயகோடி விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் விஜயாஸனர் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • வரகுணமங்கை என்று தாயார் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்பட்டாலும், நத்தம் என்று சொன்னால் மட்டுமே பலருக்குப் புரியும்.

 

  • திருவரகுண மங்கை வேதவித்து என்ற அந்தணருக்கு பெருமாள் காட்சியளித்த தலமாகும். அவரது விண்ணப்பத்தின்படி பெருமாள் இங்கு விஜயாஸனர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

 

  • அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கும் பெருமாள் இங்கு காட்சி அளித்துள்ளார்.

 

  • வரகுணவல்லி, வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுணமங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது.

 

  • நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம்.

 

  • இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.

 

  • மனிதர்கள் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வேண்டி வழிபட்டால், பூலோகத்தில் வாழும் காலம் வரை சவுகரியமான வாழ்க்கையைப் பெறலாம். வைகுண்டத்திலும் பெருமாளின் கருணைக்கு பாத்திரமாகலாம்.

 

  • மேலும் ஒரு சிறப்பாக இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

 

திருவிழா:

சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை,

மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்

நத்தம் (வரகுணமங்கை) – 628 601

தூத்துக்குடி மாவட்டம்

 

போன்:    

+91 4630 256 476

 

அமைவிடம்:

அருள்மிகு விஜயாசன பெருமாள் கோவில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

fifteen − five =