அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : காளமேகப்பெருமாள்
உற்சவர் : திருமோகூர் ஆப்தன்
தாயார் : மோகனவல்லி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம்
புராண பெயர் : மோகன க்ஷேத்ரம்
ஊர் : திருமோகூர்
மாவட்டம் : மதுரை
ஸ்தல வரலாறு:
பாற்கடலைக் கடைந்து அதன் மூலம் கிடைத்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எழுந்த சர்ச்சை பெரிதானது. தங்களுக்கு உதவுமாறு தேவர்கள் திருமாலை அழைத்தனர். (பாற்கடலில் அமிர்தம் கடையும்போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்துக்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது) அவர்களின் கோரிக்கையை ஏற்ற திருமால், மோகினி வேடத்தில் வந்தார். அப்போது அசுரர்கள் அசந்த நேரம், அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்து விடுகிறார் திருமால். இதனால் தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர்.
ஒருமுறை புலஸ்தியர் என்னும் முனிவர், திருமாலின் மோகினி அவதாரத்தை தரிசிக்க விரும்பினார். திருமாலும் அவ்வாறே அருள்பாலித்தார். அதே கோலத்துடன் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பங்களைப் பற்றி முறையிட திருமாலை காணச் சென்றபோது திருமால் நித்திரையில் இருந்தார். (கள்ள நித்திரை – தூங்குவது போல் இருப்பது) அதனால் தங்கள் குறைகளை ஸ்ரீதேவி, பூதேவியிடம் கூறிவிட்டு வந்தனர். உடனே திருமால் மோகினி வடிவம் எடுத்து அவர்களைக் காத்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘பிரார்த்தனை சயனப் பெருமாள்’ என்று பெயர் விளங்கிற்று.
கோயில் சிறப்புகள்:
- காளமேகப் பெருமாள், மேகம் மழையைத் தருவது போல பக்தர்களுக்கு அருளைத் தருகிறார். பஞ்ச ஆயுதங்கள், மார்பில் சாளக்கிராம மாலையுடன் அருள்புரிகிறார்.
- தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பதால் உற்சவருக்கு ‘ஆப்தன்’ என்ற பெயர் உருவாயிற்று.
- காளமேகப்பெருமாளுக்கு கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளக்கிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
- இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பதால் பெருமாள் ‘மோட்சம் தரும் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
- பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், தாயாருக்கு என்று விழா எதுவும் கிடையாது. நவராத்திரியில் விசேஷ பூஜை உண்டு. பங்குனி உத்திரம் அன்றுமட்டும் சுவாமி, தாயார் சந்நிதிக்குச் சென்று சேர்த்தி சேவை தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும். இவரைப் ‘படி தாண்டா பத்தினி’ என்று சிறப்பிக்கிறார்கள்.
- மோகனவல்லி தாயார், சந்நிதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், வைகாசி பிரம்மோற்சவத்தில் காளமேகப் பெருமாள் ஆண்டாளின் மாலையை அணிந்தபடி சேர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- மாசி மகத்தில் பெருமாள் மோகினி வடிவில் அருள்பாலிப்பார். மாசி மகத்தன்று ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்வார். அன்று இரவு கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்சம் நடைபெறும்.
- பெருமாள் தலங்களில் பொதுவாக வில்வம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இத்தலத்தில் வில்வமே தலவிருட்சமாக இருப்பது சிறப்பு. தாயாருக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது.
- சக்கரத்தாழ்வார் சந்நிதியில் அவர் மேல் பகுதியில் மடியில் இரணியனை மடியில் கிடத்தியபடி உள்ள நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் அருள்பாலிக்கின்றனர்.
- சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மரின் 4 கைகளிலும் 4 சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது.
- சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் அருள்பாலிக்கிறார்.
- இத்தலத்தில் மன்மதன் வழிபாடு நடைபெறுகிறது. முன்மண்டப தூண்களில் மன்மதன், ரதி சிற்பங்கள் உள்ளன. அழகில்லாததால் திருமணம் தடைபடுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்வது உண்டு. மன்மதன், ரதிக்கு சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைப்பது இன்றும் நடைபெறுகிறது.
- திருப்பாற்கடல் பொய்கைக்குக் கிழக்கில் ஒரு விருட்சம் இருக்கிறது. இந்த மரம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபரயுகத்தில் வில்வ மரமாகவும், கலியுகத்தில் அரச மரமாகவும் திகழ்கிறது. இத்தலத்தில் ஆதிசேஷனுக்குத் தங்கக் கவசங்கள் இருப்பது சிறப்பு.
- நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
- அழகர்கோவில் கள்ளழகரையும், திருமோகூர் பெருமாளையும் இணைத்து, “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்’ என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
- நம்மாழ்வார், இறைவனை சரணாகதியடைய வேண்டி பாடிய திருவாய்மொழியில், இத்தலம் பற்றி பாடியுள்ளார்.
- வைகாசி பிரம்மோற்ஸவத்தில் தினமும் சுவாமியுடன், நம்மாழ்வார் காட்சி தருகிறார்.
- கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் உயரமான வடிவில் காட்சியருள்கிறார், காளமேகப்பெருமாள்.
- பொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.
திருவிழா:
வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
முகவரி:
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்,
திருமோகூர்-625 107
மதுரை மாவட்டம்.
போன்:
+91- 452 242 3227
அமைவிடம்:
மதுரையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருமோகூர் உள்ளது. மத்திய மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் உள்ளன. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் இருக்கிறது.