June 23 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சிக்கல்

  1. சிக்கல் சிங்காரவேலவர் கோயில் வரலாறு

 

மூலவர்        :     நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

அம்மன்         :     சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம்   :     மல்லிகை

தீர்த்தம்         :     க்ஷீர புஷ்கரிணி பாற்குளம்

புராண பெயர்    :     மல்லிகாரண்யம், திருச்சிக்கல்

ஊர்             :     சிக்கல்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

முன்பொரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது, விண்ணுலகில் இருக்கும் காமதேனு பசு, உணவு கிடைக்காமல் தவித்தது. அப்போது மாமிசத்தை தவறுதலாக உண்டுவிட்டது. இதையறிந்த சிவபெருமான், காமதேனுவை புலியாக மாறும்படி சபித்துவிட்டார். தான் அறியாது செய்த தவறுக்காக, வருந்திய காமதேனு, சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரியது. மனமிறங்கிய சிவபெருமான், “பூவுலகில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள ஈசனை வழிபட்டால், சாப விமோசனம் கிடைக்கும்” என்று திருவாய் மலர்ந்தார். மல்லிகை வனமாக இருந்த மல்லிகாரண்யம் தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டு வந்தார். மிகவும் பழமைவாய்ந்த இத்தலத்தில் இருந்த ஈசனை தினமும் வழிபட்டு வந்தார்.

சிவபெருமானின் ஆலோசனைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து, நீராடியது. அப்போது அதன் மடியில் இருந்து பால் அதிக அளவில் சொரியத் தொடங்கியது. குளமே பாற்குளம் ஆனது. தேங்கிய பால் குளத்தில் இருந்து வெண்ணெய் திரண்டது. அந்த சமயத்தில் பாற்குளத்தில் திரண்ட வெண்ணெய்யைப் பயன்படுத்தி வசிஷ்ட முனிவர், லிங்கம் அமைத்து வழிபட்டார். இதன் காரணமாக, இத்தல ஈசன், ‘வெண்ணெய் நாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வழிபாடு நிறைவு பெற்றதும் லிங்கத்தை பெயர்த்து எடுக்க எவ்வளவோ முயன்றும், அதைப் பெயர்த்து எடுக்க முடியவில்லை. பெயர்த்து எடுக்கும்போது சிக்கலை ஏற்படுத்தியதால், இத்தலம் ‘சிக்கல்’ என்றானதாகச் சொல்லப்படுகிறது.

 

சிங்கார வேலவர்:

ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், தேவர்கள், முனிவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் துன்பங்களைக் கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகப் பெருமானால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள், இதுதொடர்பாக முருகப் பெருமானிடம் முறையிட்டனர். அவரும் அசுரனை வதம் செய்ய உறுதியளிக்கிறார். சூரனை அழிப்பதற்காக வேல் வேண்டி, இத்தலத்துக்கு வந்த முருகப் பெருமான், அம்மை அப்பர் முன் தவமிருந்தார். மகனின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, சக்திவேலை முருகப் பெருமானுக்கு அளிக்க விருப்பம் கொள்கிறார்.

அதன்படி முருகப் பெருமானுக்கு பார்வதி தேவி (வேல் நெடுங்கண்ணி அம்பாள்) வேல் கொடுத்து ஆசிகளை வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின்போது இந்த நிகழ்வு இங்கு வைபவமாக நடைபெறுகிறது. தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு தன் கோயிலுக்கு வந்து வீராவேசத்துடன் அமர்ந்து கொண்ட முருகப் பெருமானுக்கு வேலின் வீரியம் தாங்காமல் வியர்க்கிறது. அப்படி, முருகனுக்கு வியர்வை வெள்ளமாகப் பெருகும் சம்பவம் இன்றளவும் நடைபெறுகிறது.

பட்டுத் துணியால் பலமுறை துடைத்த பின்னரும் முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று அறியப்படுகிறது. ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்ற வழக்குச் சொல் இன்றும் உள்ளது. அம்மை அப்பருக்கு நடுவில் தனிசந்நிதியில் அருள்பாலிக்கும் சிங்கார வேலவர், குழந்தை வரம் அருள்பவராக உள்ளார். சிக்கல் சிங்கார வேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிங்காரவேலர் , வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம்.

 

  • சிவபெருமான் கோயிலில் பெருமாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, ஒரு சமயம், அசுரர் குல மன்னன் மகாபலி சக்கரவர்த்தி, தேவர்களுக்கு பல விதங்களில் இன்னல்கள் அளித்து வந்தான். இதுதொடர்பாக தேவர்கள், திருமாலிடம் முறையிட்டனர். தக்க சமயத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக திருமால் அவர்களிடம் உறுதியளித்தார். அதன்படி திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது, இத்தலம் வந்திருந்து சிவபெருமானை வணங்கி, மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றார். இதன் காரணமாக, இத்தலத்தில் திருமாலுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. ‘கோல வாமனப் பெருமாள் என்று இத்தல பெருமாள் அழைக்கப்படுகிறார். இவரது சந்நிதிக்கு முன்பாக அனுமன் சந்நிதி உள்ளது.

 

  • கோயிலின் மையப் பகுதியில் 80 அடி உயரமுள்ள கட்டுமலை மேல் மூலவர் நவநீ தேஸ்வரர், சிங்காரவேலவர் சந்நிதிகள் உள்ளன.

 

  • கட்டுமலையின் கீழ்ப்பக்கம் வேல் நெடுங்கண்ணி அம்பாள் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். சந்நிதியின் மேல்பாகத்தில் அம்பாள் முருகப் பெருமானுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் காணப்படுகிறது.

 

  • இத்தல விநாயகர் சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 

  • அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக இத்தலம் கருதப்படுகிறது.

 

  • விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

 

  • இத்தலத்தில் வழிபாடு செய்து, விஸ்வாமித்திர முனிவர், தனது தவ வலிமையை திரும்பப் பெற்றார் என்றும், முசுகுந்தச் சக்கரவர்த்தி தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

 

  • முருகப் பெருமானுக்கு வேல் வழங்குவதற்கு முன்பாக, பார்வதி தேவியே இத்தலத்தில் தவமிருந்ததாக கூறப்படுகிறது.

 

  • அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

 

  • யானை புகமுடியாதபடி கோச்செங்கட் சோழர் கட்டிய 72 மாடக் கோயில்களில் இத்தலமும் ஒன்று.

 

  • அறுபடை வீடுகளில் ‘குன்று தோறாடலும்’ ஒன்று என்பதாலும் இத்தலமும் கட்டுமலை என்பதாலும், இத்தலம் அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

 

  • கோயிலின் ஒரே வளாகத்தில் சிவபெருமான், முருகப் பெருமான், திருமால் சந்நிதிகள் இருப்பது தனிச்சிறப்பு. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற தென்கரைத் தலங்களில் 83-வது தலமாகவும், 274 சிவாலயங்களில் இதுவும் ஒரு கோயிலாக போற்றப்படுகிறது.

 

  • முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

 

  • முருகன் என்றால் இளமை மாறாதவன், அழகன் என்று பொருள். “சிங்காரம்’ என்ற சொல்லும் அழகையே குறிக்கிறது. சிக்கல் தலத்தின் அழகன் சிக்கலுக்குப் பெருமை சேர்ப்பவன்.

 

  • சிக்கலில் பார்வதிதேவியிடம் முருகப் பெருமான் வேல் பெற்று, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது ஐதீகம்.

 

திருவிழா: 

சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்,

சிக்கல்-611108.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 4365 – 245 452, 245 350.

 

அமைவிடம்:

நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

5 × 1 =