அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : பல்லவனேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : சவுந்தர்யநாயகி
தல விருட்சம் : மல்லிகை, புன்னை
புராண பெயர் : பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம்
ஊர் : பூம்புகார்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர் கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன் அதே ஊரில் வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர் சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர் மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர் தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர் மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன் தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர் இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் பட்டினத்தார் என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
கோயில் சிறப்புகள்:
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 10 வது தேவாரத்தலம் மூலவர் பல்லவனேஸ்வரர். சிவன் பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் சவுந்தர்யநாயகி.
- இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி கடலை பார்த்தபடி காட்சி தருகிறார்.
- பிரகாரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது.
- கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர்.
- இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி கடலுக்குள் புகும் இடம் என்பதால் காவிரி புகும்பட்டினம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் காவிரிப்பூம்பட்டினம் என்று மருவி தற்போது பூம்புகார் என்றழைக்கப்படுகிறது.
- பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார் அவரது மனைவி அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது.
- இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. விழாவிற்கு அடியார் உற்சவம் என்று பெயர். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும்.
- மருதவாணராக பிறந்த சிவன் அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.
- காலவ மகரிஷி, அகத்தியர், பல்லவ மன்னன் ஆகியோர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
- திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இக்கோவில் இறைவனை காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனேஸ்வரர் சிறப்புகளைப் குறிப்பிட்டு இறைவனை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள் தீ வினையும் நோயும் இல்லாதவராய் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்கள் என்று குறிப்பிடுகிறார்.
- கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் – திருக்குளம் உள்ளது.
- பட்டினத்தாரின் அவதார தலம், இயற்பகை நாயனார் அவதரித்து சிவத்தொண்டாற்றிய அவதாரத் தலமும் இதுவே.
திருவிழா:
வைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பல்லவனேஸ்வரர் கோயில் (பல்லவனீச்சுரம்)
காவிரிப்பூம்பட்டினம்,
பூம்புகார் – 609 105.
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 94437 19193.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ., சீர்காழியில் இருந்து 19 கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது. பஸ் வசதி உண்டு