June 20 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சாயாவனம்

  1. அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சாயாவனேஸ்வரர்

அம்மன்         :     குயிலினும் இனி மொழியம்மை, கோஷாம்பாள்

தல விருட்சம்   :     கோரை, பைஞ்சாய்

தீர்த்தம்         :     ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்

புராண பெயர்    :     திருச்சாய்க்காடு, மேலையூர்

ஊர்             :     சாயாவனம்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு :

இயற்பகை நாயனார்: 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலம் இதுவாகும். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் சிவனடியார்களுக்கு அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும் என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவனையும் எல்லாம் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம் என்கிறார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி, நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க” எனக்கூறி மறைந்தார். இறந்த உறவினர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தார்.

தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது.

இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார். ஐராவதம் கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் உண்டான இடத்திலுள்ள தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தம்.

 

சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கிலும், தெற்கிலும் முகப்பு வாயில்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே ஆலயத்தின் 3 நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்திற்கு வெளியே இடதுபுறம் ஐராவத தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார்.  வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சந்நிதியும் உள்ளன. மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே தெற்கு நோக்கிய இறைவியின் குயிலினும் நன்மொழியம்மை சந்நிதியும் உள்ளது.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 9 வது தேவாரத்தலம் திருச்சாய்க்காடு. புராண பெயர் மேலையூர். மூலவர் சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர், இந்திரேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் குயிலினும் நன்மொழியம்மை

 

  • சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் தாவரம் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது.

 

  • ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் – ஒளி என்பர்.) இப்பெயர் பெற்றது.

 

  • காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

 

  • சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

 

  • கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் யானையால் புக முடியாத கோயில் என்பதாகும். இக்கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.

 

  • இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். ஒரு திருமுகமும் நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம் ஒரு கரத்தில் அம்பு ஒரு கரத்தில் வில் மற்றெரு கரத்தில் கொடியுடன் காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டர மணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க சிக்கலில் அம்பாள் முருகனுக்கு வேல் கொடுத்தது போல் சிவன் இந்த வீர கண்டரமணி கொடுத்துள்ளார்.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், ” வலிக்காலில் பாய்க்காடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் சாய்க்காடு மேவிம் தடங் கடலே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்,

சாயாவனம்- 609 105,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:

+91- 4364 – 260 151

 

அமைவிடம்:

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை – பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

three × 5 =