June 19 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புளியங்குடி

  1. அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பூமிபாலகர்

உற்சவர்        :     காய்சினவேந்தன்

தாயார்          :     மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி

தீர்த்தம்         :     வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்புளிங்குடி

ஊர்             :     திருப்புளியங்குடி

மாவட்டம்       :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு :

முன் ஒருசமயம் மகாவிஷ்ணு, தன் இருதேவியர்களுள் ஒருவரான லட்சுமியுடன் பூலோகத்தில் கருட வாகனத்தில் உலா வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மணல்மேடான இடங்களை பார்த்து அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட நாரதர் உடனே பூமாதேவியிடம் சென்று இந்த சம்பவத்தினை கூறி கலகம் மூட்டினார். இதனை கேட்டு வெகுண்ட பூமாதேவி, வைகுண்டம் விடுத்து பாதாள உலகத்திற்குள் சென்று மறைந்து விட்டாள். பூமாதேவியின் கோபத்தால் உலகனைத்தும் நீரின்றி வறண்டது. குடிக்கக்கூட தண்ணீரின்றி உயிர்கள் தத்தளித்தன.

இந்நிலை கண்டு அஞ்சிய முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை தேடி வந்து முறையிட்டனர். உடனே திருமால் திருமாலும் பூமாதேவியின் கோபத்தை அறிந்து அவளை சமாதானம் செய்ய பாதாள உலகம் நோக்கி சென்றார். அங்கு சென்று பூமாதேவியை கண்டு, சமாதானமாக பேசி என்னை பொறுத்த வரை திருமகளும், நீயும் எனக்கு சமமானவர்களே என எடுத்துரைத்தார். பொறுமையின் சிகரமான பூமாதேவியும் அந்த விளக்கத்தை கேட்டு மகிழ்ந்து தன் தவறை உணர்ந்தாள். மீண்டும் வைகுண்டம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பூவுலைகையும் வளம் கொழிக்க செய்தாள். இவ்வாறு பூமிதேவியின் சினத்தை தணித்ததால் இவர் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.

 

இந்திரனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கி, யக்ஞசர்மாவுக்கு சாபநிவர்த்தி அளித்த வரலாறு:

முற்காலத்தில் இமயமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இந்திரன், மான் உருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மகத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வேண்டி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, அதில் நீராடி இத்தல பெருமாளை வணங்கினார். அவர் உருவாக்கிய தீர்த்தமே இந்திர தீர்த்தம் என பெயர் பெற்றது.

தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனை தன் கதையினால் தாக்கினார்.

அப்போது அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க ” நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக்கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்” எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருப்பெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த வேள்வியினை சிறப்புடன் செய்து முடித்து பூமிபாலகப்பெருமாளின் அருளை பெற்றதாகும் வரலாறு கூறுகிறது.

 

கோயில் சிறப்புகள் :

 

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் திருப்புளிங்குடி காய்ச்சின வேந்தர் (பூமிபாலகர்) கோயில், திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் திருப்புளிங்குடி பெருமாள் கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 

  • இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • யக்ஞசர்மா என்ற அந்தணர், வசிஷ்டரின் புத்திரர்களால் சாபம் அடைந்து, அசுரராகத் திரிந்தார். பின்னர் இத்தல பெருமாளை வழிபாடு செய்த பிறகே சாப விமோசனம் அடைந்தார்.

 

  • வருணன், நிருதி, தர்மராஜர், நரர் ஆகியோருக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.

 

  • வேத சார விமானத்தின் கீழ் உள்ள கருவறையில், மூலவர் பூமிபாலகர் மரக்காலை தலைக்கடியில் வைத்து, கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • இத்தலத்திலுள்ள லட்சுமிதேவி, பூமிபிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் மிகவும் பிரம்மாண்ட அளவில் உள்ளன.

 

  • பெருமாள் நாபியில் இருந்து தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மதேவரின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. வெளிப்பிரகாரத்தில் உள்ள ஜன்னல் வழியாக பெருமாளின் பாத தரிசனம் காணலாம்.

 

  • இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமாக இத்தலம் விளங்குகிறது.

 

  • கருவறையில் வேதாசார விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது 12-அடி நீளத்திற்கு பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய சாளரம் வழியாக தரிசிக்க வேண்டும். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது.

 

  • ஸ்ரீ தேவியும், பூ தேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இதில் ஸ்ரீ தேவி பூமகள் நாச்சியார் என்றும், பூ தேவி நிலமகள் நாச்சியார் என்றும் திருநாமம் தாங்கி காட்சியளிக்கின்றனர்.

 

  • இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு காய்சினிவேந்தர் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக அருள்பாலிக்கிறார். இவர் அக்கினி பந்தாக இருப்பதாக சொல்லப்படுவதால், இங்கு மற்ற தலங்களை போல சடாரி தலையில் வைக்கும் வழக்கம் இல்லை.

 

  • இங்கு பூ தேவி, புளிங்குடிவல்லி தாயார் என்னும் திருநாமம் கொண்டு நான்கு கரங்களுடன், அமர்ந்த கோலத்தில் தனி உற்சவ திருமேனியாக காட்சித்தருகிறாள்.

 

  • முன்னர் ஒருமுறை இராமானுஜர் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசித்தபின், ஆழ்வார்திருநகரி செல்ல திருவுள்ளம் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் தொலைவு தெரியாத காரணத்தால், அங்கு நெல் மணிகளை காய வைத்துக்கொண்டிருந்த அர்ச்சகரின் பெண்ணிடம் அதுபற்றி கேட்க, அதற்கு அந்தப்பெண் “கூப்பிடும் தூரத்தில் தான் ஆழ்வார்திருநகரி உள்ளது”என்று சாதுர்யமாக பதிலளிக்க, இராமனுஜரின் கண்களில் நீர் பெருக அவர் அகநெகிழ்ந்தார். பின் “யாமும் கூப்பிடும் தொலைவை எய்திவிட்டோம்” என்று இராமானுஜர் பதில் அளித்தார். அந்த அளவிற்கு இத்தலத்தில் வளர்ந்தவர்களுக்கு ஞானம் வந்தவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

 

திருவிழா:

  • இங்கு பங்குனி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும்.

 

  • சித்திரை மாதம் திருவைகுண்டம் கள்ளர்பிரானுக்கு நடைபெறும் பத்து நாட்கள் திருவிழாவின் ஐந்தாம் திருநாளுக்கு, இத்தல பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிப்பார்.

 

  • வைகாசியில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள், இத்தல பெருமாள் ஆழ்வார்திருநகரி எழுந்தருளி கருடசேவை காட்சியருளுகிறார்.

 

  • இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து திருவிழாக்கள் ஆகியவையும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை,

மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில்,

திருப்புளியங்குடி – 628 621

தூத்துக்குடி மாவட்டம்

 

போன்:

+91 4630 256 476

 

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 24-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம், இந்த திருவைகுண்டம் நகரில் இருந்து கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருப்புளிங்குடி. புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் திருவைகுண்டம் வழியாக செல்லும். திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழிப்பாதை நகரப்பேருந்துகளில் சென்றால் திருப்புளிங்குடியை அடையலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

thirteen + sixteen =