அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் வரலாறு,
திருவாலி, திருநகரி
மூலவர் : அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம், வேதராஜன்
உற்சவர் : திருவாலி நகராளன், கல்யாண ரங்கநாதன்
தாயார் : பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி), அமிர்த வல்லி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : இலாட்சணி புஷ்கரிணி
புராண பெயர் : ஆலிங்கனபுரம்
ஊர் : திருவாலி, திருநகரி
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.
இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.
பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.
திருநகரி ஸ்தல வரலாறு :
பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோட்சம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். பிராட்டி எம்பெருமானிடம் அவனைப்பற்றி கூறி அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோட்சம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டாள் .
எம்பெருமான் இங்கு வந்து திருக்குளத்தை பார்த்த போது, நிறைய தாமரை மலர்கள் மூடிக்கொண்டு இருந்தன. எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனுக்கும் சந்திரனுமும் ஆகும். ஆகவே, எம்பெருமான் தன்னுடைய ஒரு கண்ணை, சிறிது மூடிக் கொண்டு, இடது கண்ணை பெரிதாக விரித்துப் பார்த்தான். தாமரை மலர்களில் ஒன்றை தவிர எல்லாம் விரிந்தன. அந்த ஒன்றில் தான் மஹாலக்ஷ்மி தாயார் இருந்தார், உடனே அவரை எம்பெருமான் ஆலிங்கனம் செய்து இந்த திருத்தலத்தில் சேவை செய்தான். எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் பிரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.
கோயில் சிறப்புகள் :
- திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
- திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.
- திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.
- இந்த திவ்ய தேசம் திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. எப்படி ஆழ்வார்திருநகரி என்ற திவ்யதேசம் நம்மாழ்வாருக்கோ அதே போல், திருவாலிதிருநகரி திருமங்கையாழ்வாருக்கு.
- இத்தலத்தை சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன், மங்கைமடம் வீர நரசிம்மன். திருநகரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்ம தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்களும் உள்ளன.
- பத்ரிநாத்தில் எம்பெருமானே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்த பிறகு, அவர் திருமந்திரத்தை திருமங்கையாழ்வாருக்கு உபதேசித்த இடம் என்பதால், இந்த திவ்யதேசத்தை பத்ரிநாத்திற்கு இணையானது என்று சொல்வார்கள்.
- இத்தலத்தில் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.
- இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.
- லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.
- திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
- பெருமாள் செய்யும் திருவிளையாடல்களை அவ்வளவு எளிதில் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எப்பொழுது எந்த உருவில் வந்து நமக்கு அருள்பாலிப்பார் என்றும் சொல்ல முடியாது. முதலில் இது போதனையாக இருந்தாலும் பின்னர் அதுவே நமக்கு சொர்க்க வாசலுக்கு வழிகாட்டும். அப்படிப்பட்ட சோதனைகளை ஆழ்வார்கள் பெற்று புண்ணியம் சேர்த்திருக்கின்றனர். திருமங்கையாழ்வாருக்கும் பகவான் சோதனை செய்த பின்னர் குருவாக மாறி மந்திர உபதேசம் செய்த புனிதமான கோயில் திருநகரி என்பது. இது சீர்காழிக்கு கிழக்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.
- திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.
- தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார். அவர் இப்பொழுதும் திருமங்கையாழ்வார் உற்சவமூர்த்தியுடன் எழுந்து அருளுவார். ஆண்டாள் மனத்துக்குஇனியான் என்று கொண்டாடியதை இங்கே நினைவில் கொள்ளலாம். திருமங்கை ஆழ்வாரின் திருவடியின் கீழ் ஸ்வாமி ராமானுஜரின் சிறு வடிவிலான உற்சவ மூர்த்தி இருக்கிறது.
- ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.
- ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
- பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்.
திருவிழாக்கள் :
வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம்,
வைகுண்ட ஏகாதசி,
தை 12 கருட சேவை,
பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அழகியசிங்கர் கோயில்,
திருவாலி
திருநகரி-609 106
நாகப்பட்டினம் மாவட்டம்
போன்:
+91-4364-256 927, 94433 72567
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் இத்தலங்கள் அமைந்துள்ளன.