June 14 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில்

  1. அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில் வரலாறு

 

மூலவர்                 :     பாடலாத்ரி நரசிம்மர்

உற்சவர்               :     பிரகலாதவரதர்

தாயார்                 :     அஹோபிலவல்லி

தல விருட்சம்   :     பாரிஜாதம்

தீர்த்தம்                :     சுத்த புஷ்கரிணி

ஊர்                          :     சிங்கப்பெருமாள் கோயில்

மாவட்டம்           :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு :

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஐந்தாவது அவதாரம் நரசிம்ம அவதாரம். பக்தர்களாகிய பாகவதர்களின் பெருமையை எடுத்துக்கூறும் அவதாரம் இது. நரசிம்மர் அவதரித்த தலமாக கருதப்படுவது அஹோபிலம். நாடு முழுவதும் நரசிம்மருக்கு கோவில்கள் பல உள்ளன. சென்னை – செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற நகரில், சிறிய மலைக் குன்றின் மீது பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் குடைவரைக் கோவிலாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சிறிய குகையில் இருக்கும் கருவறையில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் உக்கிரத் தோற்றத்தில், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. உற்சவர் – பிரஹலாத வரதர். தாயார் திருநாமம் அஹோபிலவல்லித் தாயார்.

மூலவர் நரசிம்மருக்கு நான்கு கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு, சக்கரங்களைத் தாங்கியுள்ளார். இன்னொரு வலது கை அபய முத்திரை காட்டியும், மற்றொரு இடது கை தனது மடியைத் தொட்டுக் கொண்பிக்கிறார். அஹோபிலவல்லி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் ஆண்டாள் சன்னதி உள்ளது.

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும் , இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர்.மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.

 

கோயில் சிறப்புகள் :

  • மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.

 

  • இந்தத் தலத்திற்கு சிங்கப்பெருமாள் கோயில் என்றே பெயர். மலையைக் குடைந்து பல்லவர்கள் பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் இது. நரசிம்மர் அகக்குகையான இருதயத்தில் வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார். சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்ம திருத்தலங்களில் பழமையும் தனித்துவமும் கொண்டது இத்திருத்தலம்.

 

  • உக்கிர நரசிம்மராய் அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது, த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார்.

 

  • நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருட்பாலிக்கிறார்.

 

  • திருமங்கை ஆழ்வார், தம் பெரிய திருவாய்மொழி முதல்பத்து – ஏழாவது திருமொழியில் சிங்கவேள்குன்றம் எனும் இத்தல பெருமாளைப் போற்றிய பாடல்கள், தினந்தோறும் இங்கே பாடப்பெறுகின்றன. மலையே பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷம்.

 

  • நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் தம் திருமேனி நனைத்தெழுந்தார். எனவே அது சுத்த புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது.

 

  • இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்த பிரதோஷ வேளையான சாயங்கால நேரங்களில் பிரகலாதவரதனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

 

  • இத்தலத்தில் இருக்கும் அழிஞ்சல் மரத்தை பற்றி ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின் 44வது பாசுரத்தில் இந்த மரத்தின் சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.

 

  • பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் பாடலாத்ரி என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.

 

  • நரசிம்மர் உக்கிரத் தோற்றத்தில் வீற்றிருக்கும் சிங்கப் பெருமாள் கோவில் ஊருக்குள் யானைகள் அழைத்து வரப்பட்டால், அவை இரவு தங்குவதில்லை என்பது நடைமுறை.

 

  • ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.

 

  • இங்கு மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும்.

 

திருவிழா: 

சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில்,

சிங்கப்பெருமாள் கோயில்,

காஞ்சிபுரம்-603 202,

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:

+91- 44-2746 4325, 2746 4441

 

அமைவிடம் :

செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் 8 கி.மீ. தூரத்தில் சிங்கபெருமாள் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.

 

 

 

Share this:

Write a Reply or Comment

twelve + one =