அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : குந்தளேஸ்வரர்
அம்மன் : குந்தளாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
புராண பெயர் : திருக்கரக்காவல்
ஊர் : திருக்குரக்கா
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அவர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் “குண்டலகேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அனுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அனுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன், வனதுர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர்
கோயில் சிறப்புகள் :
- குண்டலகர்ணேஸ்வரர். சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
- சுவாமி அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன.
- குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது.
- இன்றும் சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது.
- ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
- திருமால் ராமாவதாரம் எடுத்தபோது அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவனே தன்னை வழிபடும் கோலத்தில் இருக்கிறார். எனவே இவரை, சிவஆஞ்சநேயர் என்றும் சிவபக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார்.
- இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்.
- குரக்குக்காவில் உள்ள இறைவனை வழிபடும் அடியார்களுக்கு துயரம் இல்லை என்றும் இத்தல இறைவனை போற்றிப் புகழ்பவர்கள் வினை நாசமாகும் என்றும் குரக்குக்காவில் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை என்றும் குரக்குக்கா தலத்தில் வாழ்பவர்களுக்கு பாவம் இல்லை என்றும் குரக்குக்காவிலுள்ள வரம் அருளும் இறைவனை துதிப்போர் வானுலகை ஆள்வர்கள் என்று திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.
- இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.
திருவிழா:
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் ,
திருக்குரக்கா-609 201,
மயிலாடுதுறை
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 – 258 785.
அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.