February 27 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கருகாவூர்

திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் வரலாறு

 

மூலவர்         :     முல்லைவனநாதர்

அம்மன்         :     கருக்காத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை

தல விருட்சம்   :     முல்லை

தீர்த்தம்         :     பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்

புராண பெயர்    :     கருகாவூர், திருக்களாவூர்

ஊர்             :     திருக்கருகாவூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் மூவர் பாடல் பெற்ற தலம்

திருஞானசம்பந்தர் வாக்குப்படி..’ தீ அழல் நெருப்பு வண்ணனாக ‘விளங்கும் சிவபெருமான்…அப்பர் பெருமான் வாக்குப்படி எல்லாமுமாய் காட்சி தரும் சிவபரம்பொருள் ‘முல்லைவனநாதர்’ என பெயர் பெற்ற ஈசன் தாயின் வயிற்றில் உள்ள கருவை சிதையாமல் காக்கும் கருக்காத்த நாயகி ‘கர்ப்பரக்ஷாம்பிகை’யாக அம்பிகை  இங்கே கோவில் கொண்டிருக்கிறாள். எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும் திருத்தலம் திருக்கருகாவூர்

உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன. மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.

 

ஸ்தல வரலாறு :

முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

 

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.

கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.

இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

 

இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.

 

கோயில் சிறப்புகள் :

  • இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரின் லிங்க வடிவம் எறும்பு புற்றினால் ஆன சுயம்பு வடிவமாகும். கருவுற்ற பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு கருச்சிதைவு போன்ற எந்த ஒரு விபரீதங்களும் ஏற்படுவதில்லை. எனவும் மேலும் இப்பெண்கள் அனைவருக்கும் சுக பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதாகவும் கூறப்படுகிறது.

 

  • ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.

 

  • இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.

 

  • இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.

 

  • வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

 

  • படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

 

  • ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

 

  • ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

 

  • மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

 

  • சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

 

  • இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.

 

  • இங்கு தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.

 

  • காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருக்காவூர் – முல்லைவனம், 2. அவளிவணல்லூர் – பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி – வன்னிவனம், 4. இரும்பூளை – பூளைவனம், 5. கொள்ளம்புதூர் – வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.)

 

  • ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.

 

  • இங்குள்ள நந்தி – உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.

 

  • சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிஷேகம் செய்வது இல்லை.சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.

 

  • முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.

 

  • இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோக்கியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.

 

  • சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது மற்ற இரண்டும் சில அம்சங்கள்.

 

  • சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 

  • அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

 

திருவிழா: 

  • வைகாசி – வைகாசி விசாகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா

 

  • புரட்டாசி – நவராத்திரி – அம்பாளுக்கு லட்சார்ச்சனை – 10 நாட்கள் திருவிழா

 

  • ஆடிபூரம் – பிரகாரம் வருவார் – 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி

ஸ்ரீ முல்லைவன நாதர் திருக்கோவில்,

திருக்கருகாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் – 614 302

 

போன்:    

+91 4374 – 273 502, 273 423, 97891 60819

 

அமைவிடம் :

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் 25 கி.மீ., தூரத்தில் பாபநாசம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் வந்து அங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பாபநாசம் வழியாக கோயிலுக்கு செல்லலாம்.

 

 

 

Share this:

Write a Reply or Comment

13 − 12 =