அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,

பணிவு தரும் அம்பிகை:
அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை முழுமையாக தரிசிக்க முடியும். பணிவை உணர்த்தும் விதமாக இவளது சன்னதி இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பணிவு குணம் உண்டாகவும், எதற்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை உண்டாகவும் இவளுக்கு அபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தேவார வைப்பு தலம்:
வீரட்டேஸ்வரர், மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு புலித்தோல் நிறத்திலான ஆடையையை பிரதானமாக அணிவித்தும், நெற்றியில் வெள்ளியிலான வில்வத்தையும் அணிவித்து அலங்கரிக்கிறார்கள். படப்பை என்றால், பூஞ்சோலை என்று பொருள்.
பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு மத்தியில் சிவன் காட்சி தரும் தலமென்பதால் இவ்வூர், படப்பை என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வழியாக விருத்தாச்சலம் சென்ற திருஞானசம்பந்தர், விருத்தகிரீஸ்வரரை வணங்கி பதிகம் பாடியபோது, இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். எனவே, இத்தலத்தை தேவார வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை, பொழில்சூழ் புனல் படப்பைதடத் தருகே என குறிப்பிட்டுள்ளார்.
தாயின் பெயருடன் பிள்ளை:
பொதுவாக பிள்ளைகளின் பெயருடன், தந்தையின் முதல் எழுத்தையோ அல்லது அவரது பெயரையோ பெயருடன் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால்,இத்தலத்தில் உள்ள விநாயகர், தன் தாயின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படுகிறார். பார்வதியால், உருவாக்கப்பட்டவர் என்பதால் விநாயகர், அம்பிகையின் செல்லப்பிள்ளை ஆகிறார்.
எனவே, இவர் இத்தலத்து அம்பிகை சாந்தநாயகியின் பெயரால், சாந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையின் மீது காட்சி தரும் இவர், தன்னை வணங்கும் பக்தர்களின் கோபங்களைக் குறைத்து, சாந்த குணத்தை தருபவராக அருளுவதாலும் இப்பெயரில் அழைக்கப் படுவதாகச் சொல்கின்றனர்.
சிறப்பம்சங்கள் :
சந்திரன், இங்கு வழிபட்டதை உணர்த்தும்விதமாக, கோயில் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலர் வைத்தபடி, சந்திரன் காட்சி தருகிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் தாமரை பீடத்தில் நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு.
Share this: