September 30 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்பில்

  1. அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சத்தியவாகீஸ்வரர்

அம்மன்         :     சவுந்திரநாயகி

தல விருட்சம்   :     ஆலமரம்

தீர்த்தம்         :     காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம்

புராண பெயர்    :     அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை

ஊர்            :     அன்பில்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

ராவணன் குபேரனைத்  தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் (சிவபெருமான்) வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். ராவணனின் கொட்டத்தை அடக்க ஈசன் தனது வலது பெருவிரல் நுனியை அழுத்த, ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டன. கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் இளகிய வாகீச முனிவர், “ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றி பாடு’ என்று ராவணனுக்கு உபதேசம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈசனின் கருணையால் ராவணன் உயிர் தப்பினான். தன்னால் தண்டிக்கப்பட்ட ராவணனுக்கு உதவிய வாகீசரின் செயல் ஈசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் “நீ பூலோகத்தில் பிறக்கக் கடவுவது’ என்று சாபமிட்டார்.

இதனால் கலங்கிய வாகீசர், பூமியில் அன்பிலாந்துறை என்னும் இத்திருக்கோயிலில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனைப் பணிந்து வழிபட்டார். ஈசனின் கருணையால் திருஆமூரில் மருள் நீக்கியவராகப் பிறந்தார்.  இந்த நிகழ்வை தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் திருநாவுக்கரசர்  சுவாமிகள். இதனால் வாகீசர் பணிந்த ஈசன் சத்தியவாகீசர் என்ற திருநாமம் கொண்டார்.   வாகீசர் என்ற திருப்பெயர் நான்முகனுக்கும், பிரகஸ்பதிக்கும் உண்டு. அவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டார்கள் என தல வரலாறு கூறுகிறது.

 

வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக மூன்று கோயில்கள் அன்பில் கிராமத்தில்  உள்ளன. அதில் பிரம்மபுரீசுவரர் கோயில் மட்டுமல்லாது, அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்,  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலும் உள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம், உள் மண்டபக் கோபுரம், உள்பிரகார மண்டபம், மகா மண்டபத்தின் தூண்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், மகா மண்டபத்தின் இடது, வலது புறங்களில்  காணப்படும் சிற்பங்கள் போன்றவை இந்த திருக்கோயிலின் பழைமையை எடுத்துரைக்கின்றன.

 

கோயில் சிறப்புகள்:

  • கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டு சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார் அருள்மிகு பிரம்மபுரீசுவரர். விசேஷமான சதுர பீட ஆவுடையராக இவர் திகழ்கிறார்.

 

  • பிரம்மபுரீசுவரரை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி, நல்வாழ்வை அடையலாம் என்றும், ஒவ்வொரு பிறவியிலும் அடைந்திருக்கும் மூன்று விதமான கடன்களிலிருந்தும் மீளலாம் என்றும் கூறப்படுகிறது.

 

  • திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் உருகி, உருகிப் பாடிய பிரம்மபுரீசுவரர் மிகவும் விசேஷமானவர். இவரை வணங்கி வலம் வருவோரை வானுலகத் தேவர்கள் வலம் வந்து தொழுவர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இறைவனை இறைஞ்சுவார்கள் என்று திருநாவுக்கரசர் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

  • இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் இறைவன், இறைவி சன்னதிகளில் வெவ்வேறு திசைகளை நோக்கி அமைந்திருக்கும். இறைவன் சன்னதியைக் காட்டிலும் சற்று உள்ளடங்கி இறைவி சன்னதி அமைந்திருக்கும். ஆனால், அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் இறைவி சன்னதி முன்னதாகவும், இறைவன் சன்னதி பின்னடங்கியும் அமைந்திருக்கிறது. மேலும் சௌந்தரநாயகி அம்மன் மணக்கோலத்தில் காட்சியளிப்பதும் தனிச் சிறப்புக்குரியது. பெயருக்கேற்றவாறு வடிவழகு கொண்டவர் சௌந்தரநாயகி அம்மன்.

 

  • திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக் காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டதால், இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் செவி சாய்த்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

 

  • நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் பலவற்றுக்கு வந்தார். சிவபெருமானுக்கு இவரைச் சோதிக்க ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் திருஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடையமுடியவில்லை. தொலைவில் நின்றவாறே சுயம்புவாய் காட்சியளித்த அன்பில் ஈசனை (சிவபெருமான்) நோக்கிப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. அங்கிருந்த சிவனின் மூத்த மகனான விநாயகர், இளையப் பிள்ளையார் என்றழைக்கப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம்பந்தரின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் ரசித்ததால், இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் செவி சாய்த்த விநாயகர் என்றாக்கப்படுகிறார்.

 

  • அன்பில் என்ற இந்த ஊரில் ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் கோயில் அமைந்துள்ளது. அதனாலேயே ஊரின் பெயருடன் ஆலந்துறை இணைத்து, இக்கோயிலில் இறைவனின் பெயர் அன்பிலாந்துறையார் என்றழைக்கப்படுகிறார்.

 

  • இதைத் தவிர பிரம்மன் வந்து இறைவனை வழிபட்டதால், கோயிலின் பெயர் பிரம்புரீசுவரர் திருக்கோயில் என்றும், இறைவன் பெயர் பிரம்மபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் தவிர, வாகீசர் முனிவர் வழிபட்ட திருக்கோயில் என்பதால், இங்குள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • மற்ற சிவன் கோயில்களில் இல்லாத வகையில் இறைவன், இறைவி சன்னதிகள் ஒரே நிலையில் கிழக்கு நோக்கிய திசையில் அமைந்திருப்பது, மூன்று நந்தியெம்பெருமான்கள் எழுந்தருளியிருப்பது, செவி சாய்த்த நிலையில் விநாயகர் காட்சியளிப்பது,  ஈசானிய மூலையில் கோயிலின் தல விருட்சம் அமைந்திருப்பது போன்றவை  அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

 

  • காது சம்பந்தமான அறுவைச் சிகிச்சைகள், காது கோளாறு போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவிக்கும், விநாயருக்கும் பூஜைகள் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

 

திருவிழா: 

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்,

அன்பில்-621 702.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91 431 254 4927

 

அமைவிடம்:

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கி.மீ., தொலைவிலுள்ள அன்பிலுக்கு அடிக்கடி பஸ் உள்ளது

திருச்சியிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அன்பில் கிராமம் உள்ளது. அங்குதான் அன்பில் அழகர் கோயிலும், அன்பில் மாரியம்மன் கோயிலும் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

1 × 5 =