September 24 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

 

  1. அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்)

அம்மன்         :     அருந்தவ நாயகி

தல விருட்சம்   :     ஆலமரம்

தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்பழுவூர்

ஊர்            :     கீழப்பழுவூர்

மாவட்டம்       :     அரியலூர்

 

ஸ்தல வரலாறு:

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “”விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,” என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் “அருந்தவநாயகி’ எனப்படுகிறாள்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

 

  • பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார்.

 

  • இவ்வூர் மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான வடமூலநாதர் (ஆலந்துறையார்) கோவில் உள்ளது.

 

  • இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்படுகிறது.

 

  • கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.

 

  • கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீ வடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது.

 

  • அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன் அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள்.

 

  • கருவறை சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர், சப்தமாதா, காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

 

  • அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.

 

  • ஆலயத்திற்கு வெளியே தல மரமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், கொள்ளிடமும் விளங்குகின்றன.

 

  • பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் “பரசுராம தீர்த்தம்’ எனப்படுகிறது.

 

  • விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை.

 

  • பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான்.

 

  • திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம்.

 

  • வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,”நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே’ என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
  • திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மலையாள அந்தணர்கள் அக்காலத்தில் பழுவூரில் வாழ்ந்து வந்தனர் என்பதை தனது பதிகத்தின் 4வது மற்றும் 11வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

  • தமிழகம் ஆலமரங்கள் அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்று. இங்கே ஊர்தோறும் ஓர் ஆலமரத்தினைக் காணலாம். தமிழக ஆலயங்களில் ஆலமரத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, திருவாலங்காட்டினைச் சொல்லலாம். இந்த ஆலயத்தின் இறைவனுக்கு வட ஆரண்யேஸ்வரர் என்று பெயர். இந்தவடமொழிப் பெயருக்கு ஆலமரக்காட்டு ஈசன் என்று பெயர். திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சமாக உள்ளது.

 

திருவிழா:

பங்குனி உத்திரம். பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். மேலப்பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில்,

கீழப்பழுவூர் அஞ்சல்-621 707

அரியலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 99438 82368

 

அமைவிடம்:

அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

6 + 3 =