December 03 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தனுஷ்கோடி

  1. அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     நம்புநாயகி அம்மன்

ஊர்       :     தனுஷ்கோடி

மாவட்டம்  :     ராமநாதபுரம்

 

ஸ்தல வரலாறு:

இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்ததாகவும். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தக்ஷ்ணா காளியாக பெயர் பெற்றதாகவும், அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தெக்ஷணா காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். உடன் இருந்த சகோதரர்கள், அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தக்ஷ்ண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன் காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான். கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடி காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தெக்ஷணா காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன் தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்ல பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியை கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே “”நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லை,” என்ற சொலவடை உருவாயிற்று. பின்னாளில் பல்வேறு காலகட்டத்தில் தற்போது உள்ள பழமையான கோயில் கட்டப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • கிழக்கு நோக்கிய ஆலயம், சுற்றிலும் மணல் திட்டுகள், மரங்கள் என இயற்கை எழிலாக அமைந்துள்ளது.

 

  • இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

 

  • நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.

 

  • இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள்

 

  • நம்பு நாயகி ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

 

  • கருவறைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில், பழைய சுதையம்மன் மறைந்துள்ளது.

 

  • இத்தல அம்மன், ‘தாழைவன ஈஸ்வரி’ என்று அழைக்கப்பட்டாலும், ‘நம்பு நாயகி’ என்றே அனைவராலும் போற்றப்படுகின்றாள். தன்னை நாடி வருவோருக்கும் குழந்தைப்பேறு வழங்குவதில் கண்கண்ட தெய்வமாக இவள் விளங்குகின்றாள்.

 

  • இக்கோயிலை சுற்றி தாழங்காடு அதிகமாக இருப்பதால் நம்பு நாயகி அம்மனுக்கு தாழங்காட்டாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. நம்புநாயகி அம்மன் கோயிலை சுற்றி ஏராளமான காவல் தெய்வம் பரிவார தெய்வங்களும் உள்ளன.

 

திருவிழா: 

நவராத்திரி.      நவராத்திரியின் போது 9 நாட்களும் நம்புநாயகி அம்மன் நவசக்திகளின் வடிவமாக கொலுவில் இருந்து 9 வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.

 

திறக்கும் நேரம்:

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில்,

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் – 623 526,

ராமநாதபுரம் மாவட்டம்.

 

அமைவிடம்:

ராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் சவுக்கு மரங்கள் சூழ்ந்த வனத்தில் மணல் குன்றுகளுக்கு நடுவில் நம்புநாயகி அம்மன் கோயில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

11 + 1 =