நானும் ஆசிரியை ஆலிசும்: –

ஸ்ரீ

Vastu - Alish Teacher

நான் இதுவரை இல்லாத அளவிற்கு நெகிழ்ந்து போன நாள் 11-04-2015.

காரணம் அன்று தான் எனக்கு மிக, மிக பிடித்த என் ஆலிஸ் டீச்சரை 37 வருடங்களுக்கு பிறகு பார்த்தேன். எனக்கு அவர்கள் 1977 – ல் இரண்டாம் வகுப்பு வகுப்பு ஆசிரியையாக இருந்தார். ஒருமுறை Very Good என்று சொல்லியவாறே கணக்கு பாடத்தில் 20/20 மதிப்பெண் வாங்கி இருக்கிறாய் என்று சொல்லி நோட்டு புத்தகத்தை அவர் என்னிடம் கொடுத்த போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு இன்று வரை எனக்கு கிடைத்து கொண்டிருக்கும்/கிடைத்திட்ட எந்த சந்தோஷமும் ஈடாகவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.(அது ஏனோ தெரியவில்லை அதன் பிறகு நான் எப்போதும் கணக்கு பாடத்தில் நூறுக்கு நூறு வாங்கவே இல்லை.)

எனக்கு 11th Std. Santhome School – ல் படிக்க Seat கிடைத்த போது

(நான் அதே பள்ளியில் 10-வது படித்திருந்தாலும் பத்தாவதில் 73% மட்டுமே எடுத்து இருந்ததால்  கண்டிப்பாக சீட் கிடைக்காது என்று என் உறவினர்கள் திடமாக நம்பி இருந்தார்கள்) ,

நான் B.E., 1st Class – ல் Pass பண்ணியபோது

(என் மொத்த குடும்பமும் –என் அப்பா,அம்மா நீங்கலாக நான் கண்டிப்பாக 4 வருடத்தில் course முடிக்க மாட்டேன் என திடமாக நம்பி இருந்தார்கள்),

என் காதலிக்கு  முதல் முத்தத்தை கொடுத்தபோது,

என் மனைவிக்கு நான் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் வைத்து தாலி கட்டிய போது,

என் மனைவி கருவுற்றாள் என டாக்டர் சொல்லி கேட்ட போது,

என் குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டபோது,

ஆண்டாளை முதன்முதலாக பார்த்தபோது,

ஆண்டாளுக்கு தங்கத்தை என் கையில் ஒட்டியபோது,

என அடுக்கி கொண்டு போகலாம் என் வாழ்க்கையில் அற்புத சந்தோஷ தருணங்களை…..

மறுபடியும் சொல்கின்றேன் நான் முதன் முதலாக கணிதத்தில் 20/20 மதிப்பெண் பெற்றிருக்கின்றேன் என்று சிகப்பு மையில் வட்டம் போட்டு பக்கத்தில் Very Good என்று எழுதியதை பார்த்தவாறே Very Good என்று ஆலிஸ் டீச்சர் வாயால் பாராட்டு பெற்று என் நோட்டை பெற்ற அந்த தருணத்தை இன்று நினைத்தாலும் என்னால் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை நினைக்கும் போதெலாம் உடம்பு சிலிர்க்கும்.

நான் சுருங்கி போகும் போதெல்லாம் என்னை விரிய செய்தவள் ஆண்டாள் என்றால் என்னாலும் விரிய முடியும் என்கின்ற எண்ணத்தை எனக்குள் என்னையறியாமல் விதைத்தவள் எனதருமை ஆலிஸ் டீச்சர். பெருக நினைக்கும் போதெல்லாம் 20/20 – Very Good என்பதை மட்டும் இன்றுவரை நினைத்து கொள்வேன்.

என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு ஆண்டாள் முழுக்காரணம் என்றால் எனதருமை ஆலிஸ் டீச்சர் தான் முதற்காரணம்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு இன்று இருக்கும் சில, பல நல்ல பழக்கங்களுக்கு முதற் காரணம் எனதருமை ஆலிஸ் டீச்சர்…

அவர் இருக்கும் இடம் தெரிந்தும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். காரணம் நான் இன்னும் பெரிய ஆளாக உருமாறி என்னுடைய வெற்றிக்கு காரணமான பல பெண்களில் முதல் பெண் ஆலிஸ் தான் என்று பல கோடி பேர்கள் காதில் விழுமாறு சொல்லி அவரை கவுரவப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தேன். அதுவரை அவரை பார்க்கவோ, பேசவோ கூடாது என்கின்ற வைராக்கியத்தை நான் எதிர்பார்க்காத தருணத்தில் எனதருமை ஆலிஸ் டீச்சரே உடைத்து விட்டார் எப்படியோ என் போன் நம்பரை கண்டுபிடித்து.

09-04-2015 அன்று காலை ஏய்! சொக்கலிங்கம்  நான் ஆலிஸ் டீச்சர் பேசறேன்… 11-04-2015 அன்று எனக்கு Retirement. கண்டிப்பாக function –க்கு வந்திடு… சரியா!! பஷீர், முரளி, கந்தசாமியிடமும் சொல்லிடு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். என்னை எல்லாம் அவர் நினைவு வைத்து இருக்க மாட்டார் என்று நினைத்து இருந்த எனக்கு அவர் போன் செய்ததே ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தாகித்தவன் தண்ணீரை தேடுகின்றான்

தண்ணீரும் தாகித்தவனை தேடுகின்றது –

என்பது மீண்டும் உண்மையாகி போனது என் வாழ்க்கையில்.

வேறு வழியில்லாமல் 11-04-2015 நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றேன். எத்தனையோ பேர் என் ஆலிஸ் டீச்சரை பற்றி பெருமையாக பேசினார்கள். அதை கேட்க, கேட்க எனக்கும் பெருமையாக இருந்தது. என்னை பேச கூப்பிட்டும் மறுத்து விட்டேன் பயமாய் இருக்கின்றது என்ற காரணத்தை சொல்லி. ஒரு வகையில் ஒரளவு உண்மையாக அது இருந்தாலும் பூரண உண்மை எனக்கு மட்டும் தானே தெரியும்….

“நான் ஆலிஸ் டீச்சரின் மாணவனாக அறியப்படுவதை விரும்பவில்லை. காரணம் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் டீச்சர் ஆலிஸ் என்று அறியப்படுவதே என் ஆலிஸ் டீச்சருக்கு நான் செய்யும் பதில் மரியாதை என்பதை உணர்ந்திருக்கின்றேன். அந்த மரியாதையை இன்றைய சூழ்நிலையில் என்னுடன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த சக மாணவ நண்பர்களால் பெற்று தர முடியாது என்பது உண்மையாகி போனதால் நான் மட்டுமே அந்த இலக்கை அடைய முடியும்.

நான் இறப்பை முத்தமிடும் முன் அதை சாதித்து காட்டி விடுவேன் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். என்னுடைய முதன் முதல் Personal கோரிக்கை ஆண்டாளுக்கு:

“நான் சாதித்து காட்டப் போகும் அந்த நொடி வரை என்னை வாழவிடு”.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

11 − two =