December 31 2017 0Comment

திரு குடந்தை :

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்:
#சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது #108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை #குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பதாகும்.
சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் ‘சார்ங்கம் மால்வில்’ எனச் சூடாமணி நிகண்டும், ‘சாரங்கம் விண்டுவில்’ என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சாரங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். ‘சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே’ என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம். இத்தொடர் நேராகத் திருமாலைக்குறிக்காது. பொதுமக்கள் இவ்வேற்றுமையை உணராமல் சாரங்கபாணி எனத் திருமாலை வழங்கத் தொடங்கிவிட்டனர். சார்ங்கபாணி என்னும் பெயர் உச்சரிக்க எளிமையாக இல்லாததே இதற்குக் காரணம். உலக வழக்கு இப்படி மாறிய உடனே நிகண்டு ஆசிரியர்களும் சாரங்கபாணி என்ற சொல்லுக்கே திருமால் எனக் கூறிவிட்டனர். 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாரதிதீப நிகண்டிலேயே ‘விண்டுநராந்தகன் சாரங்கபாணியன் வெற்பெடுத்தோன்’ என இப்பெயர் இடம்பெற்றுவிட்டது. பின்னால் வந்த அகராதிகளில் எல்லாம் சாரங்கம் என்ற சொல்லிற்குத் திருமாலின் வில் என்ற பொருள் ஏறிவிட்டது. இலக்கியத்தில் பேச்சு மொழியின் செல்வாக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
#தேர்த்திருவிழா:
இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் #சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது #மூன்றாவது பெரிய தேராகும். இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.
#12 கருட சேவை
கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.
கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ளது.
Share this:

Write a Reply or Comment

four × four =