சென்னிமலை முருகன்

சென்னிமலை முருகன்:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது.

இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும்.

வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம்.

இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

மாமாங்கத் தீர்த்தம் :

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது.

மலையின் மீதும் காகம் பறப்பதில்லை.

வரலாறு:

சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம் கட்ட தீர்மானித்தார் நிலத்தம்பிரான். கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார்.

அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்குச் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த அவரும், அவருடைய சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான்.

காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரியால், தனக்குச் சமமாக அவர் ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆகவே தன் கோபத்தைக் காட்டினார். “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசற இவனை மரத்திலே கட்டி வைங்கடா?’ என்று உத்தரவிட்டார்.

ஆனால் உடன் இருந்தவர்கள் தயங்கினார்கள். ‘‘ஐயா, இவர் பெரிய மகான். இவரை தண்டிக்கறது நமக்குதான் அழிவு’’ என்றார்கள். அவர்கள் பயப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன், பத்து வயதுப் பையன் ஒருவன், அவன் பிறந்த ஊர் காரணமாக செங்கத்துறையான் என்று அழைக்கப்பட்டான்.

பஞ்சம் பிழைக்க சென்னிமலைக்கு வந்து, ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடைய 25வது வயதிலும் அப்பாவியாக இருந்த அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார்.

கூடவே அவனை, “நிலத்தம்பிரானே!” என்று அழைக்கவும் செய்த அவர், ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’ என்றருளி மறைந்தார்.

ஒருநாள், பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். “இவனை நாகப்பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் வீட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’ என்றனர்.

அப்போது பக்கத்தில் இருந்த செங்கத்துறையான், பாம்புக் கடிபட்டவனை நெருங்கினான். பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான்.

சற்று நேரத்தில் பாம்பு கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இந்தக் காட்சியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த வித்தையை எங்கே கற்றான் அவன்? ஆனால், செங்கத்துறையானோ, ‘எல்லாம் சென்னியாண்டவன் செயல்’ என்று மட்டுமே சொன்னான். அப்போதே அவன் தன் பெயர் நிலத்தம்பிரான் என்று அனைவருக்கும் அறிவித்தான்.

சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட ஆரம்பித்தார் நிலத்தம்பிரான்.

கோயில் திருப்பணிகள் நடந்தபோது தம்பிரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன்மூலம் கிடைத்த தொகையுடன்  கட்டிடப் பணியாட்களுக்குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார்.

அவர் கூலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலலையை கலக்குவதுபோல, பணத்தை பொரியுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார்.

அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்! இதுபோனற பல அற்புதங்க்ளைச் செய்த தம்பிரானையா மரத்தோடு கட்டிப் போடுவது? அப்போது தம்பிரான், “ஐயா, என்னைக் கட்டிப் போடுவது இருக்கட்டும்.

உங்கள் மனைவிக்கு சித்தம் கலங்கி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு, ‘ஊரைக் கொளுத்தப் போகிறேன்’ வருகிறார்கள். முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள்,’’ என்று சாதாரணமாகச் சொன்னார்.

அதேநேரம் அதிகாரியின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை உறுதி செய்தார். பதட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அதிகாரி, வேலைக்காரப் பெண்கள் தன் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

அப்போது அவள்முன் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமிருந்த விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, “சென்னியாண்டவா, இந்தக் குழந்தையைக் காப்பாற்று!” என்று வேண்டிக் கொண்டார்.

அடுத்த கணமே அவள் பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்த அதிகாரியும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினர்.

அதோடு, அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.

கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார்.

சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த  சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார்.

மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள்.

மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை உள்ளது. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார்.

ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த  தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம்.

அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்!

ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகச் சென்றால் 33 கி.மீ. பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. மலைக்கு மேலே செல்ல வாகன வசதிகள் உண்டு.

Share this:

Write a Reply or Comment

17 + nine =