April 18 2018 0Comment

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்:
பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம் பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்.
இறைவன் – ஆதிபுரீஸ்வரர் புற்றிடங்கொண்டார் படம்பக்கநாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் ஆனந்தத்தியாகர் மாணிக்கம்.
இறைவி – திரிபுரசுந்தரி வடிவுடையம்மை வடிவுடை.
தலமரம் – மகிழ மரம்.
தீர்த்தம் – பிரம தீர்த்தம்.
புராண பெயர் – ஆதிபுரி.
ஊர் – திருவொற்றியூர்.
மாவட்டம் – சென்னை.
தலவரலாறு :
வைகுண்டத்தில் என்பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து பிறந்த பிரம்மன் உலகை படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒரு நகரம் அமைந்திருந்தது.
அப்போது பிரம்மா! நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கு மேல் ஒருவரா? யார் அவர் என்று பரந்தாமனிடம் கேட்டார்.
அதற்கு மகாவிஷ்ணு அந்த நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் பெயர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுபவர். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி ஆகும். திருவொற்றியூர் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கி படைக்கும் தொழிலை தொடர்வாயாக என்றார் பெருமாள். பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.
உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை ஒத்தி (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் ‘ஒத்தியூர்” எனப்பட்டது. இதுவே காலப்போக்கில் ‘ஒற்றியூர்” என மாறியது.
தல சிறப்பு :
பிற்காலத்தில் பிரம்மாவின் வேண்டுகோளிற்கிணங்க சிவன் சுயம்புவாக தோன்றினார் (சுயம்பு என்றால் மண்ணில் உள்ள கல் தானாகத் தோன்றுவது).
சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது.
ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான். இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களை பெற்றான்.
பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார் பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும் வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாவ விமோசனமளிக்கிறது.
திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது.
இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும் சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது.
பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.
மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கிறது.
திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது.
அருணகிரிநாதர் பட்டினத்தார் ராமலிங்க சுவாமிகள் சுந்தரர் திருஞானசம்பந்தர் கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம்.
Share this:

Write a Reply or Comment

19 − 1 =