கடிதம் – 18 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – III

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை) இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஓட்டுனரிடம் பயங்கர தகராறு செய்தார். எனக்கு அவர் மேல் கோபமோ கோபம். இருந்தாலும் அடக்கி கொண்டு பேருந்தின் ஓட்டுனர் என்னிடம் ரொம்ப பணிவாக கேட்டுக் கொண்டதற்காக நான் 9 –ம் எண் இருக்கைக்கு மாறி உட்கார்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். களைப்பில் நன்கு தூங்கியும் விட்டேன். இராமநத்தம் அருகில் செல்லும் போது நள்ளிரவு திடீரென்று பெருத்த சத்தம். எங்கள் பேருந்து ஓட்டுனர் வண்டியை ஓட்டும்போது தூங்கிவிட்டதால் எதிர்பாராத விதமாக முன் சென்ற அரசாங்க பேருந்தின் மேல் மோதி நான் சென்ற பேருந்தின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்திருந்தது. இரண்டு பேருந்துகளில் பயணித்த யாருக்கும் எந்தவித காயங்களோ, அடியோ துளி கூட கிடையாது – என்னிடம் சண்டை போட்டு 3 –ம் எண் இருக்கையில் வலுக்கட்டாயமாக பயணம் செய்தவரை தவிர. அவருக்கு முகம் முழுவதும் இரத்த காயம். ஒத்தை இருக்கை என்பதாலும் அவர் இருக்கையின் முன்னாடி கண்ணாடி உள் கதவு இருந்ததாலும் அவருக்கு நல்ல அடி. அந்த இரவிலும், அந்த கஷ்டத்திலும் என் மனதினுள் ஒரு சிறிய சந்தோஷம். நாம் சாக பிறக்கவில்லை. என் அப்பா சொன்னது போல் என் பிறப்பு வேறு எதற்காகவோ என்பது போல் நினைத்து கொண்டு அடிபட்டவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு தனியார் பேருந்து ஓட்டுனரிடம் சென்னைக்கு அரசாங்க பேருந்தில் செல்வதற்கு ஏதுவாக (நாங்கள் குழுவாக 16 பேர் மட்டும்) பணத்தை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பி வந்து சேர்ந்தோம். என் அம்மா, அப்பாவிடம் கொட்டி தீர்த்து விட்டேன், நான் பாட்டி வீட்டில் அவமானப்பட்ட கதையை. அவர்களுக்கும் ஒரே கஷ்டமாகி போய் விட்டது. நான் அவர்களிடம் கோவில்களுக்கு போய் வந்ததையும், பேருந்து விபத்தை பற்றி மட்டும் சொல்லிவிட்டு வேறு எந்த விஷயத்தை பற்றியும் கூறாமல் அடுத்து என்ன என்று அன்று மதியம் முதல் யோசிக்க ஆரம்பித்தேன்.

–    என் அப்பா என்னை கோவிலுக்கு போய்விட்டு வரச் சொன்னதில் இருந்து நான் சென்னை திரும்பி வந்தது வரை நடந்த சம்பவங்கள் எல்லாம் ஏதோ சங்கிலி தொடர்பு போல் இருந்தது. யோசிக்க, யோசிக்க பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

என்னிடம் எத்தனையோ பலவீனங்கள் இன்றளவு இருந்தாலும் என்னுடைய ஒரே பெரிய பலம் என்ன என்று யாராவது கேட்டால் என்னை ஒருமுறை பார்த்து சில நிமிடங்கள் பேசியவர்கள் கூட சட்டென்று சரியாக சொல்லிவிடுவார்கள் – “அது என்னுடைய ஞாபக சக்தி” என்று. அப்படிப்பட்ட ஞாபகசக்தி வாய்க்கப்பட்ட எனக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் இன்று வரை சுத்தமாக ஞாபகத்திலும் இல்லை. ஞாபகப்படுத்தவும் முடியவில்லை.

–    அதில் முதலாவது திருச்செந்தூரில் என்னிடம் பேசிய அடியார் முகம் என் ஞாபகத்தில் இல்லை.

–    திருச்செந்தூர் கோவிலில் என்னை கடந்து சென்ற இரண்டு பேரின் முகம் என் ஞாபகத்தில் இல்லை.

–    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் என்னை சந்தித்த மனிதர் முகமும் என் ஞாபகத்தில் இல்லை.

மேற்கூறிய மூன்று விஷயங்களும் இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஒரு அமானுஷ்ய ஆச்சரியமாகவே இருந்து வருகின்றது.

இது தவிர நடந்த சம்பவங்களில் ஒரு ஆச்சரிய உண்மை ஒளித்து இருக்கின்றது என்பது தான் அடுத்த கட்ட சுவாரசியம். என் அப்பா அவர் வாழ்நாளில் மிகவும் அடிக்கடி உபயோகப்படுத்திய வார்த்தைகள் “காரணமின்றி காரியமில்லை”. அதன் அர்த்தம் அவர் என்னை கோவிலுக்கு போக சொல்லி நான் போய் வந்த பின் தான் புரிந்தது.

ஆச்சரியம் 1:    தீவிரமான திராவிடர் கழக கொள்கை பிடிப்பு கொண்ட என் அப்பா தனக்கு திருநீறு வைத்துக்கொண்டு என்னை கோவிலுக்கு போகச் சொன்னது.

ஆச்சரியம் 2:    கடவுள் நம்பிக்கை கொண்ட என் அம்மா பணம் இல்லாத போது எதற்காக கோவில், குளம் என்று கேட்ட பின்னும் நான் கோவிலுக்கு பிரயாணப்பட்டது.

ஆச்சரியம் 3: பேருந்து பிரயாணம் என்றாலே எனக்கு சிறு வயது முதல் ஒத்து வராது. அப்படிப்பட்ட நான் குடித்துவிட்டு பேருந்து பயணம் செய்தேன் என்பது கனவிலும் நடக்காத விஷயம். ஆனால் நடந்தது.

ஆச்சரியம் 4:    நேராக கோவிலுக்கு போயிருந்தால் எந்தவித மாற்றமும் என்னிடம் ஏற்படாமல் சென்னை வந்து இருப்பேன். ஆனால் நொடியில் எடுத்த முடிவு என்னை என் பாட்டி வீட்டிற்கு போகச் செய்தது. அந்த கால கட்டங்களில் அவ்வாறு முடிவெடுக்க கூடியவல்ல நான். அங்கு போனதால் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் / பிள்ளையார்பட்டி போன்ற இடங்களுக்கு போக முடிந்தது. பெரிய விபத்திலிருந்து தப்ப நேரிட்டது. எனக்குரிய இருக்கையில் சண்டை போட்டு அமர்ந்து விபத்தில் சிக்கியவர் முகத்தில் கொட்டிய இரத்தத்தை நினைக்கவே பயமாக இருக்கின்றது. அடிபட்ட பின் அந்த நபர் சொல்லிய வார்த்தை “நீ தப்பிச்சுட்டேயா”. அவர் கஷ்டப்பட்டு சொன்னாரா அல்லது வருத்தப்பட்டு சொன்னாரா என்பது எனக்கு தெரியாது. அன்று யோசித்து பார்க்கையில் அது எனக்கு கடவுளிடம் இருந்து கிடைத்த ஆசீர்வாதமாக எடுத்து கொண்டேன்.

ஆச்சரியம் 5:    என்னிடம் திருச்செந்தூரில் பேசின அடியார் ஏன் வந்தார், எதற்கு திடீரென்று சென்றார் என்பது யோசித்து பார்க்கையில் அது மற்றொரு ஆச்சரியம்.

ஆச்சரியம் 6:    நான் சிறுவயதிலிருந்தே பசி தாங்க மாட்டேன். ஆனால் 1 நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தது அடுத்த அதிசயம்.

ஆச்சரியம் 7:    என்னிடமே பணம் இல்லை. ஆனால் என்னை அறியாமல் என்னிடம் இருந்த சொற்ப பணத்திலிருந்து ரூ.100 – ஐ ஆண்டாள் கோவிலில் நான் சேர்த்தது எனக்கே புரியாமல் நடந்த அதிசயம்.

ஆச்சரியம் 8:    பிச்சையாக கிடைத்த உணவானது புளி சாதமாகும். உணவு வகையிலேயே எனக்கு மிகவும் பிடித்த புளி சாதத்தையும், ரூ.10 –ஐயும் என்னிடம் உரையாடிய அடியாருக்கே கொடுத்து விட்டேன் – அதுவும் என்னையறியாமல். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்தப் பணத்தையும், சாப்பாட்டையும் வாங்கி கொண்டதும் ஓர் அதிசயம். திடீரென்று என்னிடம் வந்து பேசியவர், திடீரென்று சதுரகிரி போகணும் என்று என்னை விட்டு சென்றதும் ஓர் அதிசயம்.

ஆச்சரியம் 9:    அடியார் எனக்கு சொன்ன “இதுவும் கடந்து போகும்” என்ற வாக்கியத்தை அவர் சொன்னதை நேராக இருந்து கேட்டதை விட சிந்தித்து பார்த்த போது அந்த வாக்கியமே ஓர் அதிசயமாக பட்டது.

ஆச்சரியம் 10:   பிள்ளையார்பட்டி கோவிலில் சாமி கும்பிட கருவறை முன் நின்ற போது அங்கிருந்த குருக்கள் என்னை முன்வந்து உட்கார்ந்து பிள்ளையாரை வணங்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் சந்தோஷத்துடன் உட்கார்ந்து சாமியை பார்த்தேன். 400 –க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலையை உடைத்த எனக்கு பிள்ளையார்பட்டியில் முதல் மரியாதை கிடைத்தது அதிசயத்தின் உச்சகட்டம். (பின் குறிப்பு:- பிள்ளையார்பட்டியில் வேலை பார்க்கும் தலைமை குருக்கள் உள்ளிட்ட அனேக குருக்கள் என் அம்மா பாட்டி வாழ்ந்த இடத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதை பிற்காலத்தில் நான் அறிந்து கொள்ள நேரிட்டது போது அதுவும் ஒரு வகையான ஆச்சரியத்தை கொடுத்தது).

ஆச்சரியம் 11:   நான் எந்த காலத்திலும் செய்த உதவிகளை யாருக்கும் சொல்லி காட்டியது இல்லை. ஆனால் என் அம்மா பாட்டி, என் அத்தையிடம் அவ்வாறு சொல்லி நான் கடினமாக நடந்து கொண்டதும் ஒரு ஆச்சரியம் தான்.

இப்படி அதிசயங்களை அசைப்போட்டவாறே இரவு தூங்கி போனேன். அடுத்த நாள் திருச்செந்தூரில் எனக்கு கேட்ட இரண்டாவது வார்த்தைக்கு அர்த்தத்தை தேடி T.Nagar –ல் 4 – 5 பதிப்பகங்கள் அலைந்து திரிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படம் போட்ட ஒரு புத்தகம் வாங்கி வந்து ஒரு மணி நேரத்தில் முழு புத்தகத்தையும் படித்து முடித்து, அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயத்தின் படி என் வீட்டின் வடக்கு சுவரில் ஒரு செங்கல் வைக்கும் அளவிற்கு துவாரமும், வீட்டிலிருந்த Arch –களை மெலிதான மரத்துண்டுகளை வைத்து மறைத்தும், வடகிழக்கு மூலையில் சின்ன அகல்விளக்கும் ஏற்றி வைத்தேன். நான் இந்த மூன்றையும் செய்த அடுத்த நாளே என் ஆட்டம் ஆரம்பமானது.

எப்படி என் ஆட்டம் ஆரம்பித்தது?

வாஸ்து, ஜோதிடம், பெயர் மாற்றம் உண்மையா?

அடுத்த மாத வாடகைக்கு பணம் இல்லாத நிலையில் இருந்த என் வாழ்க்கையில் நடந்தது என்ன?

பதில் – அடுத்த கடிதங்களில் விரிவாக சொல்கின்றேன்:-

வாழ்க்கையில் வெற்றி பெற்ற யாரும் சொல்ல துணியாத சூட்சுமங்களை, சொல்லாத இரகசியங்களை என் வாழ்வில் நடந்தேறிய அற்புத அனுபவங்களுடன் சொல்லுவேன்…

அதை புரிந்து கொள்ள கீழ்கண்ட இந்த வாக்கியத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்:

“மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்து விட்டால் தவறில்லை….

அதற்காக பொழுது போக்கிற்காக மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே…

பிழைப்பிற்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு….

உன் மரணம் ஒருவனை வாழ வைக்கட்டும்”.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 − 2 =